தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 1-ந் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள பேரவை வளாகத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூடியது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதா பற்றி அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். வேலூரில் பேசிய அவர், "நீட் தேர்வு தொடர்பாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். அதனை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பினால் சனியன் தொலைந்தது என்று அவர் இருந்து விடலாம். இல்லையென்றால் ஆளுநரை திட்டிக் கொண்டே இருப்போம் என தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தும் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய துரைமுருகன், "அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை மக்களுக்கு நேரடியாக சென்று சேர்க்கும் வகையில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் மிக முக்கியமானதாகும். எனவே உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறும் நபர்கள் மக்களின் தேவைகளை அறிந்து அதனை அரசிடம் விரைவாக பெற்று அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனக் கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் வேலூர் மாநகராட்சி கொண்டுவரப்பட்ட ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் உறுதுணையாக இருந்துள்ளனர். இது போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டு உள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆன நிலையில், கொரானா தொற்று மற்றும் மழை இயற்கை சீற்றங்கள் உள்ளிட்டவற்றால் மக்களின் உயிர் முக்கியம் என்பதால் அவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது. நிர்வாகத்தை முழுமையாக கவனிக்க முடியவில்லை எனவே இனிவரும் காலங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
234 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நீட் தேர்வு தொடர்பாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அதனை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநரிடம் அளித்தால், அவர் அதை வாங்கிக்கொண்டு இடத்தில் போட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தில் அடித்தாற்போல் அதை திருப்பி அனுப்பி உள்ளார். மீண்டும் அதனை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பியுள்ளோம். அதனை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பினால் சனியன் தொலைந்தது என்று அவர் இருந்து விடலாம். இல்லையென்றால் தினமும் ஆளுநரை திட்டிக் கொண்டே இருப்போம்" என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்