R.S. Bharathi DMK:  கட்சித் தலைவி சிகிச்சையில் இருக்கும் போது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி தோசை சாப்பிட்டவர்கள் அதிமுகவினர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். 


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து வீடியோ ஒன்றை தனது, டிவிட்டர் பக்கத்திலும் அதிமுக டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். அதற்கு, பதில் அளிக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் பேசியதாவது, ”அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து மிகவும் கேவலமாக பேசியுள்ளார். முதலமைச்சரின் குற்றச்சாட்டு சரியான பதில் அளிக்க முடியாமால் பிதற்றுகிறார். தனது கட்சித் தலைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ரூபாய் ஒன்றரை கோடிக்கு இட்லி தோசை சாப்பிட்டவர்கள் தான் அதிமுகவினர். இதனை நான் கூறவில்லை முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திமுக அப்படிப்பட்ட கட்சி அல்ல, ஒரு தொண்டனுக்கு இடுக்கு ஏற்பட்டாலும், பதறிப்போய் பார்ப்பவர்தான் எங்கள் தலைவர்” என கூறினார். 


டான்சி வழக்கு


மேலும் அந்த பேட்டியில், ”முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு போட்டது நான் தான். அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால், அரசாங்கத்தின் சார்பிலும் வழக்கு போடப்பட்டது. இதனால் ஒரு பிரச்சனைக்கு ஏன் இரண்டு வழக்குகள் இருக்கவேண்டும் என, நான் நிபந்தனையுடன் வழக்கை வாபஸ் பெற்றேன். இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதும், நான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். அதனால் தான் ஜெயலலிதா டான்சி நிலத்தினை ஒப்படைப்பதாக சரணடைந்தார். 


அதேபோல், 4 ஆயிரம் கோடி ஊழல் செய்த எடப்பாடி பழனிச்சாமி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். மேலும், வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கூறினோம், ஆனால் அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, மாநில காவல்துறையே விசாரிக்க உத்தரவிடக்கோரி மனு அளித்திருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளதால், காவல்துறையே விசாரிக்க நாங்கள் ஒத்துக்கொண்டோம். 


 ஜெயலலிதாவைப் போலவே, எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி நிச்சயம் சிறை செல்வார்கள்” என கூறினார்.


மேலும், ”இவர்கள் தலைவி முதல் சாதாரண ஆட்கள் வரை அனைவர் மீதும் குற்றச்சாட்டுகளை நிரூபித்து, தண்டனை பெற்றுத்தந்திருக்கிறோம். செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படிருப்பது, உங்கள் தலைவி முதலமைச்சராக இருந்தபோது போடப்பட்ட வழக்கு தான். நீங்கள் எங்களை தாக்குவதாக நினைத்துக்கொண்டு உங்கள் தலைவியை இழிவு படுத்துகிறீர்கள்” என கூறினார்.