சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். 


முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அக்கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி கொடுங்கையூரில் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.


அப்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தரக்குறைவான கருத்துகளை பேசியிருந்தார். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. எதிர்க்கட்சிகள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜூன் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.






இதனைத் தொடர்ந்து முதலில்  கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக திமுக அறிவித்தது. பின்னர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உத்தரவிட்டார். இரண்டு முறை ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3வது முறையாக மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த  நீதிபதி எஸ்.அல்லி எதிர்காலத்தில் இதுபோல அநாகரிகமாக பேசக்கூடாது என கூறி ஜூலை மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 


இப்படியான நிலையில் தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்க கோரிக்கை விடுத்திருந்தார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக தலைமை கழகம் அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட கோரிக்கை விடுத்ததை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.