அதிமுகவினர் அண்ணா பல்கலை விவகாரத்தை கையில் எடுத்த நிலையில், இன்று திமுகவினர் அண்ணா நகர் வழக்கை கையில் எடுத்துள்ளது , சட்டப்பேரவையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
’யார் அந்த சார்?” - அதிமுக
இந்த ஆண்டின், முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது, ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே, ஆளுநர் தனது உரையை புறக்கணித்துச் சென்றது பெரும் பேசுபொருளானது. அதுமட்டுமன்றி சட்டப்பேரவை தொடங்கியது முதலே,அதிமுகவினர் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கையில் எடுத்தனர். குறிப்பாக , அதிமுகவினர் அனைவரும் சட்டையில், யார் அந்த சார் என்ற பேட்சை அணிந்து குரல் எழுப்பினர். இதனால், முதல் நாளே எதிர்க்கட்சிகளின் குரலால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் பதில்:
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மாணவிக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத்தருவதை தவிர, வேறு எந்த நோக்கமும் தமிழ்நாடு அரசுக்கு கிடையாது; குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை துரித நடவடிக்கை எடுத்த பின்னரும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததை குறை சொல்கின்றனர். ஆனால் அதற்கு காரணம் தேசிய தகவல் மையம் தான். அதற்கு அந்த அமைப்பும் விளக்கம் கொடுத்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும், யார் அந்த சார் என்ற எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதில் அளிக்கையில், “ உண்மையாகவே எதிர்க்கட்களிடம் ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வு குழுவிடம் தெரிவியுங்கள்; அதை தவிர்த்து வீண் விளம்பரத்திற்காக மலிவான செயலில் ஈடுபட வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.
”இவன்தான் அந்த சார்” - திமுக
ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து யார் அந்த சார் என்ற பேட்சுடன் வருகை தர ஆரம்பித்தனர்.
இந்நிலையில், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் , குற்றவாளியை பாதுகாக்க முயற்சித்து, தப்பிக்க நினைத்த அதிமுக பிரமுக சுதாகர் கைதானதாக கூறப்படும் நிலையில், சுதாகரின் புகைப்படத்துடன், ” இவன் தான் அந்த சார்” என்ற பதாகையுடன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். மேலும், இவன் தான் , அந்த சார் என்ற கோசங்களும் எழுப்பியதால், சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், யார் அந்த சார் என்று அதிமுகவினரும், இவன் தான் சார் என்று திமுகவினர் ஒருவொருக்கொருவர் எதிர்ப்பு தெரிவித்தது சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.