தனது தந்தை மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், அந்த செல்வாக்கை பயன்படுத்தி முறைகேடுகள் செய்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது சிபிஐ புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.


ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கிய கார்த்தி சிதம்பரம்


கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், தனது தந்தை ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது, அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், பல்வேறு ஊழல்களை செய்ததாக புகார் எழுந்தது. ஐ.என்.எஸ் மீடியா வழக்கு, சீனர்களுக்கு சட்டவிரோத விசா வழங்குவதற்கு தனது அட்வான்டேஜ் ஸ்ட்ராடிஜிக் கன்சல்டிங் என்ற நிறுவனம் மூலம் அவர் முறைகேடு செய்தது என அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு கார்த்தி சிதம்பரமும், அவரைத் தொடர்ந்து அவரது தந்தை ப. சிதம்பரமும் கைதாகி பின்னர் விடுதலையானார்கள். 


கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கு


இந்த நிலையில், தற்போது, கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. அதன்படி, கார்த்தி சிதம்பரம் மற்றும் வாசன் ஹெல்த் கேர், இங்கிலாந்து மதுபான தயாரிப்பு நிறுவனமான டியாஜியோ ஸ்காட்லாந்து, செக்வோயா கேபிடல் ஆகிய நிறுவனங்களுடன் இணை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2008-ம் ஆண்டு, டியாஜியோ ஸ்காட்லாந்து நிறுவனம் இந்தியாவில் வரியில்லா மதுபானங்களை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.


முதல் தகவல் அறிக்கை(FIR) கூறுவது என்ன?


அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம், பல்வேறு திட்டங்களில் செய்த ஆய்வில், கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் ஸ்ட்ராடிஜிக் கன்சல்டிங் நிறுவனத்திற்கு, டியாஜியோ ஸ்காட்லாந்து மற்றும் செக்வோயா கேபிடல் நிறுவனங்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிதியை மாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், கார்த்தி சிதம்பரம், அவரது நெருங்கிய கூட்டாளியும், நிறுவன பங்குதாரருமான எஸ். பாஸ்கரராமன் மற்றும் வேறு சில நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டி வழக்கு பதியப்பட்டுள்ளது.