மக்களவை கூட்டம்- களத்தில் இறங்கும் திமுக எம்பிக்கள்

மக்களவையில்  குளிர்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள்  தொடங்கவுள்ளது. இதனையடுத்து மக்களவையில் திமுக எம்பிக்களின் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (29-11-2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் கோரிக்கை வைத்தும் 12 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. 

Continues below advertisement

தீர்மானம் : 1மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்.

தீர்மானம் : 2ரயில் திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்குக் கண்டனம்!

Continues below advertisement

தீர்மானம் : 3பிரதமர் நேரில் தலையிட்டு கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க வேண்டும்.

தீர்மானம் : 4கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தந்திடுக!

தீர்மானம் : 5கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவும், ஆளுநருக்குக் கால நிர்ணயம் செய்யவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்! தீர்மானம் : 6செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட ஒன்றிய அரசுக்கு மாண்புமிகு முதலமைச்சர் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றிடுக!

 தீர்மானம் : 7நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்த்திடுக!

 தீர்மானம் : 8கல்வியில் காவிக் கொள்கையைத் திணிக்கும் பேயாட்டத்தை நிறுத்தி  3548.22  கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா நிதியை  உடனே விடுவித்திடுக!

 

 தீர்மானம் : 9

ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது!

தீர்மானம் : 10இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு அவசியம்.

 தீர்மானம் : 11பணி நியமனம்  பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை ஒன்றிய அரசு பாதுகாத்திடுக.

தீர்மானம் : 12கிராமப் புற ஏழை மக்களுக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிடுக! என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுகவலைதள பதிவில், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!

அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்!வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பா.ஜ.க. அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.