நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குறித்து தர்மபுரி திமுக எம்.பி., டாக்டர் செந்தில்குமார் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடுமையான வார்த்தைகளால் சீமானை அவர் விமர்சித்துள்ளார். அந்த பதிவில், 


‛‛பொய்யர் சீமான் பொய் மட்டும் தான் பேசுவார் என்பதற்கு இது சான்று நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமூக நீதி பேசும் படம் என்று தமிழர்கள் கொண்டாடும் திரைப்பாடம் ஆனால் நான் பதிவிடாத, சொல்லாததை கூச்சமே இல்லாமல் சொல்கிறார் அது சரி குறைந்த பட்சம் மனசாட்சியுடன் பேச இவர் என்ன மானமுள்ள மானிடனா’’


என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன், நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேட்டி ஒன்றில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், 






‛‛ஒருத்தரெல்லாம் பாராளுமன்ற உறுப்பினர் என்று நினைக்கிறேன்... செந்திலா? (என அருகில் இருப்பவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்கிறார்). பெரியாரை நான் பார்த்தது இல்லை; காக்கிச் சட்டையில் உதயநிதியை பார்த்ததும் அப்படியே மெய் மறந்து போய்ட்டேன்.... பெரியாரை பார்த்தது மாதிரியே இருக்கு... அய்யய்யய்யோ... பெரியாருக்கு வந்த சோதனை’’ என அந்த வீடியோவில் சீமான் பேசியிருந்தார்.


இந்நிலையில் தான், தான் அவ்வாறு எதுவும் பேசவில்லை என்றும், தான் பேசாத ஒன்றை, பேசியதாக பேட்டியில் கூறியிருக்கும் சீமான் ஒரு பொய்யர் என்றும், அவர் பொய் தான் பேசுவார் என்பதற்கு இதுவே சான்று என்றும் செந்தில்குமார் அதில் தெரிவித்துள்ளார். 


சீமானின் பேட்டிக்கு காரசாரமாக தனது கருத்தை தெரிவித்துள்ள செந்தில்குமாரை நாம் தமிழர் கட்சியினர் ரவுண்ட் கட்டி வருகின்றனர். அது தொடர்பாக செந்தில்குமாரின் பதிவில் எதிர் கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தொலைக்காட்சி பங்கேற்பாளர் இடும்பாவனம் கார்த்திக், செந்தில்குமாருக்கு சவால் விடுத்துள்ளார். அந்த பதிவில், 


‛‛சும்மா பொய்யர், பொய்யர்னு டிவிட்டர்ல உக்காந்து கூவாதீங்க.. நீங்க சொன்னபடி விவாதத்துக்கு வாங்க.. அங்க உங்க தரப்பு வாதங்களை வைங்க.. நாங்க எங்க தரப்பு வாதங்களை வைக்கிறோம். எது பொய் என்பதை, மக்கள் முடிவு செய்யட்டும். அந்த விவாத மோதலுக்கு வரத் துணிவிருக்கிறதா?’’






என்று அந்த பதிவில் இடும்பாவனம் கார்த்திக் சவால் விட்டுள்ளார். இந்த பதிவைத் தொடர்ந்த நாம் தமிழர் கட்சியினர் பலர் களமிறங்க, அதுவரை நாகரீகமாக சவால் விட்ட இடும்பாவனம் கார்த்திக், அதன் பின் கோதாவில் இறங்கி, செந்தில்குமார் எம்.பி.,யை ஒரு பிடி பிடித்தார். 






 


இப்படி இந்த பதிவுகள் போய் கொண்டிருக்க, அதில் அழையா விருந்தாளியாக எண்ட்ரி ஆனார், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.,மாணிக்கம் தாகூர். 


‛‛மானமா? அப்படினா?


இப்படிக்கு சீமான் அண்ணன்’’






என, ஒரு பதிவை மாணிக்கம் தாகூர் பதிவிட்டார். அவ்வளவு தான், அப்படியே நாம் தமிழர் தம்பிகள், கொஞ்சம் மாணிக்கம் தாகூர் பக்கமும் திரும்பினர். இடும்பாவனம் கார்த்திக் தன் பங்கிற்கு, 


‛‛சூடு சொரணையா? அப்படினா?


-காங்கிரஸ்’’






என ஒரு பதிவிட, காங்கிரஸ்கட்சியினர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பதிவில், மறு பதிவு இட ஆரம்பித்துள்ளனர். திமுக எம்.பி., தொடங்கி வைத்த பதிவு, இப்போ நாம் தமிழர், காங்கிரஸ் என நீண்டு கொண்டிருக்கிறது. ‛இதுக்கு ஒரு எண்ட்’டே இல்லையா!