அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிறையில் இருந்த செந்தில்பாலாஜி, ஜாமீன் பெற்று வெளியே வரும் வரை அமைச்சரவை மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. அவர் வெளியே வந்த உடனே ஏற்கனவே அவர் வகித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அவருக்கு வழங்கப்பட்டது. அதோடு, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார்.


இந்நிலையில், கொங்கு மண்டலம் மட்டுமின்றி, மற்ற மாவட்டங்களிலும் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொண்டு, திமுகவின் தனிப்பெரும் தலைவராக உருவாக அமைச்சர் செந்தில்பாலாஜி காய் நகர்த்தி வருவதாக அறிவாலய வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.


மூத்த அமைச்சர்களையே ஓரம் கட்டும் செந்தில்பாலாஜி?


காலம் காலமாக திமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகளைவிட கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து வந்து, திமுகவில் சேர்ந்த செந்தில்பாலாஜிக்கு ஏன் திமுக தலைமை இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்ற கேள்வி? திமுக தலைவர்களுக்கு நாளொருமேனி பொழுதொரு வண்ணம் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதுவும், அமைச்சரவையில் பல மூத்த அமைச்சர்கள் இருந்தாலும், செந்தில்பாலாஜியிடம் சென்றால் மற்ற துறைகளிலும் கூட காரியம் ஆகிவிடும் என்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், கட்சி நிர்வாகிகள் பலரும் அவரது ஆதரவாளர்களாக மாறி வருகிறார்கள்.


கொங்கு மண்டல தலைவராக துடிக்கும் செ.பா..!


அதே நேரத்தில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல் ,சேலம் ஆகிய மாவட்டங்களில் தன்னுடைய கொடியே இனி பறக்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி ஸ்கெட்ச் போட்டு பணி செய்து வருவதாகவும், கொங்கு மண்டலம் என்றாலே தன்னுடைய பெயர் தான் அனைவருக்கும் நினைவு வர வேண்டும் என்ற எண்ணத்தில் செந்தில்பாலாஜி இயங்கு வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.


ஆனால், திமுக தலைவர்கள் பலருக்கும் செந்தில் பாலாஜியின் இந்த மூவ் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் முத்துச்சாமி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், ஏற்கனவே கோவை பொறுப்பு அமைச்சராக பணியாற்றிய சக்கரபாணி ஆகியோர் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் பிடிக்காமல் ’அவருக்கு மட்டும் ஏன் தலைமை இப்படி முக்கியத்துவம் கொடுக்குறாங்க?’ என்ற கேள்விகளை தன்னுடைய சகாக்களிடம் தினந்தோறும் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


பெரம்பலூரிலும் கால் ஊன்றும் செந்தில்பாலாஜி?


இந்நிலையில், கொங்கு மண்டலத்தை மட்டும்தான் அவர் கைப்பற்றி தன் வசமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்றிருந்த நிலையில், மற்ற மாவட்டங்களையும் ஒவ்வொன்றாக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியிலும் செந்தில்பாலாஜி இறங்கியுள்ளதாக பேசப்படுகிறது. குறிப்பாக, கரூர் மாவட்டத்திற்கு அருகே இருக்கும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவர செந்தில்பாலாஜி நினைப்பதாகவும் அதற்கான காய்நகர்த்தல்களில் அவருக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.






செ.பா புகைப்படம் போட்ட அருண் நேரு – பொறுப்பு அமைச்சர் சிவசங்கர் புகைப்படம் தவிர்ப்பு


அதற்கு சாட்சியாக, திமுக பெரம்பலூர் தொகுதி எம்.பியும் திமுகவின் மூத்த நிர்வாகியாக இருக்கும் கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு, தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நேற்று ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளார்.


அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரின் புகைப்படத்தோடு நீலகிரி எம்.பி ஆ.ராசா புகைப்படத்தையும், அமைச்சர் செந்தில்பாலாஜி புகைப்படத்தையும் போட்டு அந்த போஸ்டரை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


ஆ.ராசா திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது புகைப்படத்தை தன்னுடைய போஸ்டரில் அருண் நேரு போட்டுள்ளார் என்று வைத்துக்கொண்டாலும் ஏன் அமைச்சர் செந்தில்பாலாஜி புகைப்படத்தையும் அந்த புகைப்படத்தில் சேர்த்துள்ளார்? என்ற கேள்வியை உடன்பிறப்புகள் எழுப்பி வருகின்றனர்.


இது குறித்து அருண் நேரு தரப்பு ஆதரவாளர்களிடம் கேட்டதற்கு, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில், கரூரின் ஒருசில பகுதிகள் வருவதால் அவர் செந்தில் பாலாஜி புகைப்படத்தை போட்டிருக்கிறார் என்று சொன்னாலும் இதையெல்லாம் நம்புவது மாதிரி இல்லையே என்று பேசிக்கொள்கிறார்கள் உடன்பிறப்புகள்.


அதே நேரத்தில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவரும் அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் புகைப்படத்தை போடாமல் அருண் நேரு தவிர்த்துள்ளது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


பொறுப்பு அமைச்சர் புகைப்படத்தை போடாமல், அருகே இருக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி புகைப்படத்தை அருண் நேரு தன்னுடைய போஸ்டரில் போட்டதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் திட்டம் வெளிப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கருதிவருகின்றனர்.


வாழ்த்து சொல்லாததால் போட்டோ போடவில்லையா ?


இது பற்றி அமைச்சர் சிவசங்கர் ஆதரவாளர்கள் இடையே விசாரித்தப்போது, அருண் நேரு பிறந்தநாள் எப்போது என்று அமைச்சர் சிவசங்கருக்கு தெரியாததால், அவர் அருண் நேருவுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றும் அதனால் கூட சிவசங்கர் புகைப்படத்தை அருண் நேரு தவிர்த்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டனர்.


செந்தில்பாலாஜி வழியில் செல்கிறாரா அருண் நேரு ?


மேலும், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திமுக முதன்மை செயலாளராகவும் இருக்கும் கே.என்.நேருவின் மகனே, அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த செந்தில்பாலாஜியின் புகைப்படத்தை பகிரங்கமாக தன்னுடைய போஸ்டரில் போட்டுள்ள நிலையில், அருண் நேருவும் செந்தில் பாலாஜி வழியை பின்பற்றத் தொடங்கியிருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.