தி.மு.க., குறி வைக்கும் ஆவடி, தொண்டாமுத்தூர்; எஸ்.பி.வேலுமணி, பாண்டியராஜன் மீது ஏன் கோபம்?

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாஃபா பாண்டிராஜன் போட்டியிடும் தொண்டாமுத்தூர் மற்றும் ஆவடி தொகுதிகளை திமுக தீவிரமாக குறிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கியிருப்பதாக கூறும் திமுக, தமிழகத்தில் குறிப்பாக இரு தொகுதிகள் மீது தீவிர குறி வைக்கிறது. ஒன்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதி. மற்றொன்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் போட்டியிடும் ஆவடி தொகுதி.

Continues below advertisement

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்லம் போட்டியிடும் போடி தொகுதிகள் மீது இல்லாத குறி, தொண்டாமுத்தூர், ஆவடி மீது ஏன்? அதற்கு தி.மு.க.,வினர் சில ஆழமான காரணங்களை கூறுகின்றனர்.

அதிமுக ஆட்சி கவிழும் என முதல் நாளிலிருந்து ஸ்டாலின் வைத்த ஆருடங்களை பொய்ப்பிக்க வைத்ததில் எஸ்.பி.வேலுமணிக்கு பெரும் பங்கு இருப்பதாக திமுக தலைமை ஆழமாக நம்புகிறது. அது மட்டுமின்றி கோவை மண்டலத்தில் திமுகவின் வளர்ச்சியை தடுத்ததில் வேலுமணி பின்னால் இருந்து செயல்பட்டதையும் ஸ்டாலின் மறக்கவில்லை என்கின்றனர்.



மக்கள் கிராம சபைக்கு பல்வேறு பகுதிக்கு ஸ்டாலின் சென்றிருந்தாலும் முதலில் எதிர்ப்பு மற்றும் சர்சை எழுந்தது தொண்டாமுத்தூரில் தான். அதிலும் எஸ்.பி.வேலுமணியின் வேலை இருப்பதாக ஸ்டாலின் கருதுவதால் அவரின் தோல்வியை உறுதிபடுத்தவே காங்கேயம் கார்த்திகேய சேனாதிபதியை தொண்டாமுத்தூரில் இறக்கியுள்ளது தி.மு.க., எப்படியாவது தொண்டாமுத்தூரில் வெற்றியை பதிவு செய்ய வேண்டும்  என்பதை விட, எஸ்.பி.வேலுமணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் என்கிற வேகம் தி.மு.க.,வினரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

மற்றொருவர் மாஃபா பாண்டியராஜன். யாரையும் கடும் சொற்களால் விமர்சிக்காதவர். நாகரீகமாக பழகுபவர் என பல்வேறு முகங்கள் அவருக்கும் இருந்தும் தி.மு.க., ஏன் அவரை குறி வைக்கிறது? அதற்கு சில முக்கிய காரணங்களை முன் வைக்கிறது தி.மு.க.,
ஆவடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தான் திமுகவின் முதல் டார்கெட்  என்கின்றனர். ஆவடியில் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினே நேரடியாக, மாஃபா பாண்டியராஜனை தோற்கடித்தே ஆக வேண்டும் என கூறியிருப்பது தான் அதை உறுதி செய்திருக்கிறது. அதிமுகவின் அமைச்சராக இருந்தாலும் அவரை பாஜகவின் முகமாகவே திமுக பார்க்கிறது.


 தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரான மாஃபா பாண்டியராஜன், சமஸ்கிருதத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், நீட், ஜி.எஸ்.டி போன்றவை தமிழகத்திற்குள்  நுழைய பாண்டியராஜன் தான் காரணம் என ஏற்கனவே வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்த நிலையில் தமிழக கலாச்சாரம், பண்பாடு, கீழடி, கல்விக்கொள்கை, திருவள்ளுவர் விவகாரங்களில் பாண்டியராஜனின் கருத்துகள் தி.மு.க.,விற்கு எரிச்சலூட்டியது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மற்ற பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்தின் போது பேசியதற்கும், தொண்டாமுத்தூர் மற்றும் ஆவடி பிரசாரத்தின் போது ஸ்டாலின் பேசியதற்கும் இருக்கும் வீரியத்தை ஒப்பிட்டு தி.மு.க.,வின் முக்கிய டார்க்கெட் தொண்டாமுத்தூர் மற்றும் ஆவடி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ‛ஐ பேக்’ நிறுவனமும் சமீபமாக தொண்டாமுத்தூர் மற்றும் ஆவடியில் காட்டி வரும் அலாதி கவனமும் தி.மு.க.,வின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola