வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் மூர்த்தி சபதம் ஏற்றுள்ள நிலையில், அதற்கான பணிகளை அவர் தொடங்கியுள்ளார். மதுரையை பொறுத்தவரை திமுக அமைப்பு ரீதியாக மூன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். கோ.தளபதி, மணிமாறன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக செயல்பட்டு வரும் நிலையில், பிடிஆர் அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற அமைச்சர் மூர்த்தி சபதமேற்று அதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறார்.
உள்குத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி
2026 தேர்தல் முக்கியமான தேர்தலாக இருக்கிறது. குறிப்பாக, இதுவரை திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்ததில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுத முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார். அதனால், முக்கியமான தன்னுடைய தளகர்த்தர்களை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் திமுக பெரும்பான்மையான வெற்றியை பெற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி மதுரையில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அதற்காக, மாவட்டத்தில் உள்ள கோஷ்டி பூசல்கள், உள்ளடி வேலைகளை முதலில் சரிக்கட்ட நினைத்த அமைச்சர் மூர்த்தி, தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் அதனை செய்து வருகிறார். இதனால், மதுரையில் இந்த முறை திமுக 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை உடன்பிறப்புகளுக்கு வந்துள்ளது.