தமிழக பாஜகவில் கே.டி.ராகவன்
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் கே.டி.ராகவன், தமிழ்நாடு அரசியல் களத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, பாஜகவின் கொள்கைகளை தீவிரமாக வெளிப்படுத்தி வந்தார். இது மட்டுமில்லாமல் பாஜக சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொள்ளவும் செய்திருந்தார். மாநில பொதுச்செயலாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அடுத்த தமிழக பாஜக தலைவர் பெயர் பட்டியலிலும் கே.டி. ராகவனின் பெயரும் அடிபட்டு வந்தது.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த 2021ஆம் ஆண்டு கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கட்சி பொறுப்பில் இருந்து விலகியவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து, சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். கடந்த சில வருடங்களாக பாஜக நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கட்சியில் மூத்த நிர்வாகிகளாக இருந்தவர்களுக்கு பொறுப்பும் அறிவிக்கப்பட்டது.
4 வருடமாக அமைதி காத்த கே.டி.ராகவன்
அந்த வகையில் சுமார் 4 வருடங்களாக அமைதி காத்து வந்த கே.டி. ராகவனுக்கு பாஜக மாநில பிரிவு அமைப்பாளராக பொறுப்பை பாஜக தலைமை வழங்கியது. இதனையடுத்து கட்சிப்பணிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார் கே.டி.ராகவன். இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் கே.டி.ராகவன் பங்கேற்றார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், என்னை பேசுவதற்காக அழைக்கும் போது, கே.டி. ராகவன் எவ்வளவு வருடமாக இருக்கிறார். எவ்வளவு பெரிய சீனியர் என பேசினார்கள்.
என்னால் கவுன்சிலர் கூட ஆகமுடியவில்லை
என் கூட இருந்த நண்பர்கள் எல்லாம் இப்போ எந்த இடத்தில் இருக்கிறார்கள் என தெரியுமா.? அந்தமான் நிக்கோபர் மாநிலத்திற்கு நான் பொறுப்பாளராக இருந்தேன். அப்போது என் கூட இரண்டு மாநிலத்திற்கு பொறுப்பாளராக இருந்தவர் தான் இன்று மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார்.மக்களவையை நடத்திக்கொண்டிருக்கும் ஓம் பிர்லாவும் நானும் ஒன்றாக நிர்வாகியாக இருந்தோம். இப்போது அவர் சபாநாயகராக உள்ளார். அனுராக் தாகூர் மந்திரியாகிவிட்டார். நான் இன்னும் கவுன்சிலர் கூட ஆகவில்லை. எவ்வளவு நாள் தான் இப்படியே போய் கொண்டிருப்பது என கே.டி.ராகவன் வேதனை பட பேசியவது, அவரது ஆதரவாளர்களை வருத்தம் அடைய செய்தது.