CM MK Stalin DMK 75th Anniversary Speech:  திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்தும், திமுகவை உருவாக்கிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 115வது பிறந்தநாள் மற்றும் பெரியாரின் 145வது பிறந்த நாள் உள்ளிட்ட, மூன்று விழாவை திமுக முப்பெரும் விழாவாக வேலூரில் கொண்டாடியது. 


அதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”திமுக என்பது, பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரது கொள்கையில் செயல்பட்டு வருகிறது. தோன்றிய காலம் முதல் தற்போது வரை இளமையோடும், துடிப்போடும் உள்ள கட்சி திமுக.  2 கோடி கொள்கைவாதிகளைக் கொண்ட கட்சி திமுக. உங்கள் ரத்தத்தால், வியர்வையால், உழைப்பால் தியாகத்தால் உருவான கட்சிதான் திமுக. மொத்தம் 6 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. ஆட்சி மற்றும் கட்சி மூலம் தமிழ்நாட்டில் பெரும் முன்னேற்றத்தை கொண்டுவந்த கட்சி திமுக. இடையிடையே கொள்கையற்ற அதிமுக ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்ததையும், திமுக தனது ஆட்சிக் காலத்தில் சீர் செய்துள்ளது.” என்றார். 


மேலும் பேசிய அவர், ”ஒன்றிய அரசு வசூல் செய்யும் வரியை முறையாக பிரித்து கொடுப்பது இல்லை. ஜிஎஸ்டி மூலம் ஒன்றிய அரசு மாநில அரசை முடக்கப்பார்க்கிறது. 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை. தேர்தல் நேரத்தில் கண் துடைப்பிற்காக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. மத்தியில் ’இந்தியா’ கூட்டணி அமைந்தால் 15 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்” என பேசியுள்ளார். 


மேலும், “ நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் அனிதா தொடங்கி ஜெகதீஸ் வரை மாணவர்கள் தங்களின் டாக்டர் கனவை எட்ட முடியாமல் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலை தற்போது வட மாநிலங்களிலும் நீடிக்கிறது. குறிப்பாக ராஜஸ்தானில் மட்டும்  நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு மாணவர்கள் தங்களின் மருத்துவக் கனவை எட்ட முடியாமல் இதுவரை 20க்கும் மேற்பட்ட நீட் தேர்விற்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பாஜக அரசு இதுவரை ஆராய்ச்சி செய்துள்ளதா? கொடுத்த வாக்குறுதிகளை பாஜக இதுவரை  நிறைவேற்றியுள்ளதா? நான் ஒரு மீம் பார்த்தேன், அதில் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன 1000 ரூபாய் கொடுத்தாச்சு, மோடி சொன்ன 15 லட்சம் என்னாச்சு என குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக அரசு தாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காகவே மற்ற பிரச்னைகளை எழுப்புகின்றனர். பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் இந்திய நாட்டின் கடன் ரூபாய் 55 லட்சம் கோடியில் இருந்து, ரூபாய் 155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாஜகவின் ஊழல் முகத்தை கிழித்து, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். தமிழ்நாடு மட்டும் இன்றி நாடு முழுவதும் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறவேண்டும். நீட் தேர்வு விலக்கு மற்றும் மதுரை எய்ம்ஸ் போன்றவை இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் விரைவில் நிறைவேற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.