நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போல், இந்த முறையும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


எதிர்பார்ப்பை கிளப்பும் நாடாளுமன்ற தேர்தல்:


வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்க உள்ளது.


அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருப்பதால் தமிழ்நாட்டில் அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்ற பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது. ஆனால், கடந்த முறை போன்று, இந்த முறையும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் திமுக தலைமையிலான கூட்டணி அதிரடியில் இறங்கியுள்ளது.


குறிப்பாக, தங்களின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் மூன்று தொகுதிகளையும் கைப்பற்ற திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், பாஜக குறிவைத்து வேலை பார்க்கும் தென்சென்னையில் இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


காலை உடைத்து கொண்ட தமிழச்சி தங்கப்பாண்டியன்:


ஏன் என்றால், திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளும் இந்த தொகுதியில் பலமான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார்.


பாஜகவை பொறுத்தவரையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன், தென்சென்னையில் போட்டியிடுகிறார். தெலங்கானா ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் களம் இறங்கியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு, தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து 62 ஆயிரத்து 223 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


மருத்துவர்களின் ஆலோசனையை மீறி பரப்புரை:


கடந்தாண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளான தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. எனவே, பல சவால்களுக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஈடுபட்டு வருகிறார்.


இந்த நிலையில், சைதாப்பேட்டையில் தேர்தல் அலுவலகத்தை திறக்கும்போது தமிழச்சி தங்கப்பாண்டியன் கால் தவறி கீழே விழுந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


பிசியோதெரபி செய்யவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும், 15 நாள்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால், தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் கூட இல்லாத நிலையில், மருத்துவர்களின் ஆலோசனை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.


ஊன்றுகோலின் உதவியோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு தேவையான ஏற்பாடுகளையும் திமுகவினர் செய்து கொடுத்துள்ளனர்.