நெல்லையில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மாதம் ஒருமுறை மின் கணக்கீடும் நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, "கோவை பகுதிகள் பயங்கரவாதத்தின் கேந்திரமாக மாறி வருகிறது. இது கோவைக்கான பாதிப்பாக பார்க்க கூடாது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கான ஒரு இனக் கலவரத்தை உருவாக்க கூடிய மையமாக மாற்றும் ஒரு சர்வதேச சதியுடன் செயல்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றனர். அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஒற்றுமை உணர்வையும், ஒருமைபாட்டையும், நல்லெண்ணத்தையும் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் வருகிற 17 ஆம் தேதி கோவையில் அரசியல் சார்பற்ற வகையில் அமைதி பேரணி ஏற்பாடு செய்திருக்கிறோம். சமூக நல்லிணக்கத்தை விரும்பக்கூடிய தமிழகத்தில் இருந்து அனைத்து மதத் தலைவர்களும் பேதங்கள் இன்றி கலந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகிறது. ஆட்சிக்கு முன்பாக பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளித்திருந்தனர். 505 வாக்குறுதிகள், ஆனால் எதையுமே பெரிய அளவில் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.
மாதம் ஒரு முறை மின் அளவீட்டு முறை என்பது மிக மிக முக்கியமான வாக்குறுதியாகும், ஆனால் 18 மாதங்கள் ஆகியும் அது குறித்து சட்டமன்றத்திலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி எதுவும் சொல்லவில்லை. அதற்கு மாறாக மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். சென்னை, கோவை, நெல்லை போன்ற மாநகர பகுதிகளிலாவது மழை வருவதற்கு முன்பாக எந்தெந்த பகுதிகள் மழை தேங்கும், அதனால் என்னென்ன பாதிப்புகள் வரும் என பார்த்து சரி செய்து இருக்கலாம். இப்போது மழை ஆரம்பிக்கவே இல்லை, ஆனால் ஒரு நாள், இரண்டு நாள் மழைக்கே சென்னை ஸ்தம்பிக்கிறது. பல இடங்களில் சாலை நிர்மூலமாகியுள்ளது. நெல்லை மாநகராட்சியிலேயே பல இடங்களில் சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. குறைந்தபட்சம் சாலைகளையாவது சரி செய்திருக்கலாமே என கேள்வி எழுப்பினார். நெல்லை - தென்காசி சாலைகளை இரண்டு மாத இலக்கிற்குள் முடித்திருக்க வேண்டும், இல்லையெனில் டிசம்பர் மாதம் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார்.
திமுக கொடுத்த முக்கிய வாக்குறுதி ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என 2011 க்கு முன்பே கொடுத்த வாக்குறுதி. ஆனால் அதற்கு மாறாக சட்டவிரோதமான பார்கள் இருக்கிறது. கொடுத்த அனைத்து வாக்குறுதிகளில் இருந்தும் பின்னோக்கி போகின்றனர். எதை பற்றியுமே அவர்கள் கவலைப்படுவதாக இல்லை என தெரிவித்தார். திமுக அவர்கள் தோல்வியை மறைப்பதற்காக இரண்டு விசயங்களை தற்போது கையில் எடுக்கின்றனர். ஒன்று ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், இன்னொன்ரு ஆளுநருக்கு எதிரான போராட்டம் என விமர்சித்தார். ஆளுநர் ஒரு கருத்து சொல்கின்றார் என்றால் அதற்கு மாற்று கருத்தை வைக்கலாம், அவர் சொன்ன கருத்து எந்த விதத்தில் தமிழகத்தில் 8 கோடி மக்களுக்கு எதிரானது. அவர் தனது கருத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்