சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இக்கூட்டத்திற்ஜான ஏற்பாடுகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. 


முன்னதாக, திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இவற்றின் அழைப்பின்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் சென்னையில் குவிந்து வருகின்றனர். 






இந்த பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும், திமுகவின் 15வது கழக பொதுத்தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் தேர்தல் நடந்தது. தொடர்ச்சியாக மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளை  பொதுக்குழு கூட்டத்தில் பதவியேற்க இருக்கின்றனர். இதில், திமுக தலைவராக 2வது முறையாக முதலமைச்சர் முக ஸ்டாலின் பதவியேற்கிறார்.


திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் கூட்டப்படும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.அதோடு, இந்த கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்படுவதாலும், மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள மு.க.ஸ்டாலின் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடையே எகிறியுள்ளது. 


ஏற்கனவே, அமைச்சர்கள் சிலர் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு கடிவாளம் போடும் வகையிலும், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களின் பதவிகள், தயவு தாட்சண்யம் இன்றி பறிக்கப்படும் என்ற எச்சரிக்கையை மு.க.ஸ்டாலின் விடுக்கவுள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதோடு, துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 7ஆக உயர்த்தவும், சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பதிலாக புதிய பெண் துணைப் பொதுச் செயலாளரை நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிய துணைப்பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.