தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் 3ஆம் பாகத்துக்கான ஆடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில், இத்துடன் இது முடியப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 


தி.மு.க. ஃபைல்ஸ்:


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், திமுக ஃபைல்ஸ் முதல் பாகத்தை அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.


அதனைத் தொடர்ந்து 3 மாதங்கள் கழித்து திமுக ஃபைல்ஸ் இரண்டாவது பாகத்தை வெளியிட்டார். அதில், அரசுத் துறைகளில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் வெளியாகி இருந்தன.


3ஆம் பாகம் வெளியீடு


இந்த நிலையில், திமுக ஃபைல்ஸ் 3ஆவது பாகத்தை ஆடியோ வடிவில் அண்ணாமலை அண்மையில் வெளியிட்டார். அதில், திமுக எம்.பி. டி.ஆர். பாலு மற்றும் தமிழக உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜாஃபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்று இருந்தன. தொடர்ந்து இன்று திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மற்றும் உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜாஃபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்று உள்ளன. 


இந்த உரையாடலில், எதுவும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும் வழக்கு விசாரணை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது குறித்து ஆ.ராசா பேசுவது போன்ற ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், ’’2 ஜி வழக்கு குறித்த சிபிஐ விசாரணையை திமுக எவ்வாறு கையாண்டது என்பது குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தி வருகிறோம்.


இத்துடன் இது முடியப்போவதில்லை


இதில் சாட்சிகள் தயார் செய்யப்பட்டு, குறிவைக்கப்பட்டு, மிரட்டப்பட்டுள்ளனர். இவ்வாறுதான் 2ஜி விசாரணையை காங்கிரஸ் அரசு நடத்தியுள்ளது. இத்துடன் இது முடியப்போவதில்லை’’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 






முன்னதாக திமுக ஃபைல்ஸ் வீடியோவின் ஆரம்பத்தில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், மு.க.அழகிரி, அழகிரியின் மகன் துரை ஆகியோரின் புகைப்படங்கள்  இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதே நேரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆடியோக்களின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படவில்லை.