தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி டிசம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம். டிச.18ல் மதசார்பற்ற முற்போக்கு தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் வடசென்னையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மான விவரம் பின்வருமாறு:
தீர்மானம் : 1
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருக்கு நன்றி.
இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்க விழாவினையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் கடந்த 19.12.2021 அன்று அவரது சிலையை முதல்வர் திறந்து வைத்து, கருவூல கணக்குத் தொடர்பான அலுவலகங்கள் உள்ளிட்ட 15 அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் அந்த வளாகத்திற்கு “பேராசிரியர் அன்பழகன் மாளிகை” எனப் பெயர் சூட்டி, இனமானப் பேராசிரியர் அன்பழகன் படைத்த நூல்களையும் நாட்டுடைமையாக்கி - நூலுரிமைத் தொகையையும் பேராசிரியரின் குடும்பத்தாருக்கு வழங்கி இனமானப் பேராசிரியரின் திராவிட இயக்க தொண்டிற்கும் - அப்பழுக்கற்ற பொது வாழ்விற்கும் புகழ் சேர்த்த கழகத் தலைவரும், முதலமைச்சர் “7500 கோடி ரூபாய் மதிப்பில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” நேற்று (30.11.2022) அறிவித்தார்.
அவரது நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில் இந்த வருடம், 19.12.2022 அன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் D.P.I வளாகத்தில் இனமானப் பேராசிரியரின் திருவுருவச் சிலை நிறுவி, அந்த வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும் எனவும், கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருக்கு இந்தக் கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 2
இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு - தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்!
நூறாண்டுகளைக் கடந்து வீறுநடைபோடும் திராவிட இயக்கத்தில், முக்கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலான பங்களிப்பை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருக்கு அண்ணனாக - தோழனாகத் துணை நின்ற இனமானப் பேராசிரியர் முக்கால் நூற்றாண்டுக்கு மேலான பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர். ஒன்றாகப் பயணித்த இந்த இருபெரும் தலைவர்களுக்குமான இந்தப் பெருமைமிகு நல்வாய்ப்பு திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்திற்கு மட்டுமே உரியது.
தந்தை பெரியாரின் தொண்டராக, பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக, முத்தமிழறிஞர் கலைஞரின் தமையனாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தத்துவத் தலைமையாக, தன் வாழ்நாள் முழுவதும் அப்பழுக்கற்ற கொள்கைக் கோபுரமாக உயர்ந்து நின்றவர் இனமான பேராசிரியர்.
தேனில் ஊறிய சுளையின் சுவையென, தென்றலில் மிதந்து வரும் நறுமலர் மணமென, விடியல் தந்திடும் கதிரவன் ஒளியெனத் திகழ்ந்தன பேராசிரியர் பெருந்தகையின் கருத்தாழம் மிக்க சொற்பொழிவுகள். இன உணர்வும், மொழி உணர்வும், பண்பாட்டுப் பெருமையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அவருடைய எழுத்தாற்றலில் விளைந்த படைப்புகள் அனைத்துமே திராவிட இயக்கத்தின் கருவூலங்கள்.
நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக இருந்து, இன -மொழி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர் நம் இனமானப் பேராசிரியர். சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என இரு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர். சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தன் பங்களிப்பை நிறைவேற்றியவர் இனமானப் பேராசிரியர். முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சிக்காலங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, நிதித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக இருந்து மக்களுக்கானத் திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சோதனைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்ட காலங்களில், கொள்கையுணர்வு சிறிதும் குன்றாமல், இயக்கத்தைக் காக்கும் பெரும் பொறுப்பை சுமந்திருந்த முத்தமிழறிஞர் கலைஞருக்கு உற்ற துணையாக நின்று, தோள் கொடுத்துக் காத்தவர் இனமானப் பேராசிரியர். பேராசிரியர் என்ற சொல்லுக்கேற்ப கழகத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாநாடுகளிலும் - பொதுக்கூட்டங்களிலும் கொள்கை வகுப்பு போல உரைகளை வழங்கி, இனஉணர்வையும் மொழி உணர்வையும் விதைத்து வளர்த்தவர். நம் கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சருக்கு ‘பெரியப்பா’ எனும் கொள்கை உறவாக இருந்து, அவர்தம் பொதுவாழ்வுப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்லாசிரியராக வழிகாட்டி, நல்ல மதிப்பெண் அளித்துப் பாராட்டியவர் இனமானப் பேராசிரியர்.
தள்ளாத வயதிலும், தளராத தத்துவச் சிந்தனைகளுடன் கடைசி மூச்சு வரை கழகத்திற்காகவே வாழ்ந்த இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து நடத்தி அவரது பெருமைமிகு பொதுவாழ்வுக்கு புகழ் மாலை சூட்டியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
“முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் பேரறிஞர் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும்” என்று தன்னை முன்மொழிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து, கொள்கையுணர்வு மறையாமல் நம் நெஞ்சில் நிலைத்து, நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 15 (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் அந்த கூட்டங்களை மாவட்டக்கழகச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட இந்தக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மாபெரும் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
அதேபோல் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டிசம்பர்-17 (சனிக்கிழமை) அன்று பேராசிரியரின் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கம் நடைபெறும். டிசம்பர்-18 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடசென்னையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்.
இனமானப் பேராசிரியர் பிறந்த நாளான 19-12-2022 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளைக் கழகங்களின் சார்பிலும், துணை அமைப்புகளான அணிகள் சார்பிலும் இனமானப் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் மட்டுமின்றி கழக அமைப்புகள் உள்ள மாநிலங்கள் அனைத்திலும், கழக உணர்வாளர்கள் உள்ள இடங்கள் தோறும், இல்லங்கள் தோறும் இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் புகழ் ஒளி பரவிடச் செய்வோம். அந்த நன்னாளில் நாடெங்கும் முழங்கட்டும் திராவிடக் கொள்கை முரசம்