நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோடி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் இன்று தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், திமுக நாடாளுமன்ற தொகுதி கூட்டணி பங்கீடு குழு உறுப்பினர்கள் கே என் நேரு, ஐ பெரியசாமி, திருச்சி சிவா, ஆ ராசா, பொன்முடி உள்ளிட்டோர் சிபிஎம் கட்சியுடன் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மத்தியக் குழு தலைவர் சம்பத், மத்திய செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ் மற்றும் குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து விருப்ப தொகுதிகளின் பட்டியலை திமுக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பங்கீடு குழுவிடம் வழங்கியுள்ளது.
திமுக உடனான நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், "திமுக உடனான பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்றது. இரு தரப்பினரும் மனம் திறந்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கோரிக்கை வைத்ததாக கூறினர்.
இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை திமுக நிறைவு செய்துள்ளது.