தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுகவினருக்கு அக்கட்சியின் தற்போதைய தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


"குருதி ஓட்டமாக இயக்கிக் கொண்டிருப்பவர் கருணாநிதி"


அதில், "நம் இதயத்துடிப்பாகவும், குருதி ஓட்டமாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் தலைவர் கருணாநிதி. அவர் நம்மை இயக்குவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை நம்மால் அவர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிகரமாக இயக்க முடிகிறது.


தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலேயே கருணாநிதியை போன்ற பொதுவாழ்வில் சளைக்காமல் உழைத்து, சாதனைகள் பல படைத்த தலைவரைக் காண்பது அரிது. இந்திய வரைபடத்தில் தேடவேண்டிய ஒரு குக்கிராமமான திருக்குவளையில் பிறந்து, திருவாரூர் எனும் சிறிய நகரில் பயின்று, 14 வயதில் மாணவப் பருவத்திலேயே மொழி-இன உணர்வுடனான கொள்கை வழி நடந்து, பெரியார்-அண்ணா எனத் தன் தலைவர்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் கடுமையாக உழைத்து, போராட்டக் களத்திற்கு அஞ்சாத வீரனாக, சிறைத் தண்டனையைச் சிரித்த முகத்துடன் ஏற்கும் தீரனாக, படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் தலைவர் கருணாநிதி.


முதன் முதலில் தேர்தல் களம் கண்ட 1957 முதல், இறுதியாகத் தேர்தல் களம் கண்ட 2016 வரை 13 தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற இந்திய அரசியல் தலைவர் கருணாநிதி மட்டுமே. 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர். அளப்பரிய திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியான சாதனைகள், இந்திய அரசியலில் முக்கியப் பங்காற்றிப் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணைநின்ற அரசியல் ஆளுமை.


"திறமைகளும் சாதனைகளும் ஒருங்கே பெற்றவர்"


இத்தனைத் திறமைகளும் இவ்வளவு சாதனைகளும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் கருணாநிதிதான். அவர் நம்மை நாள்தோறும் இயக்கும்போது, நம் உழைப்பும் அவரிடம் பெற்றதாகவே இருக்கும். நம் இயக்கமும் அவர் வழிகாட்டிய திசையில் நடக்கும்.


ஜூன் 3, கருணாநிதியின் 99-ஆவது பிறந்தநாள். அன்றைய தினம் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடும் ஏற்றத்தோடும் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும் என்று நேற்று காலையில் (மே 28) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் இருவண்ணக் கொடி ஏற்றும் விழாக்கள் ஆகியவை மாவட்ட அளவில் தொடங்கி, கிளைகள்தோறும் நடத்தப்பட வேண்டும். ஒரு நாளோடு முடிந்துவிடுவதில்லை நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள். அவர் நிறைவேற்றிய சிறந்த திட்டங்களையும், அவர் கற்றுத் தந்த ஆட்சிக்கான இலக்கணத்தின்படி தொடர்கின்ற 'திராவிடல் மாடல்' அரசின் கடந்த ஓராண்டு கால சாதனைகளையும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்றிட வேண்டும். கழகத்தின் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் அவற்றைப் பதியச் செய்திட வேண்டும். 


அடுத்த ஆண்டு (2023) ஜூன் 3-ஆம் நாள் முத்தமிழறிஞர் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா. அதற்கு முன்னதாக, தலைவர் கலைஞரின் 99-ஆவது பிறந்த ஆண்டில் கழகத்தின் சார்பில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தகவல்தொழில்நுட்ப அணி உள்ளிட்ட துணை அமைப்புகளைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்’ நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்:


அமைதி தவழும் சமூகநீதி நிலமான தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்குத் துளியும் இடம் கொடுக்காத வகையில், சுயமரியாதை உணர்வையும் சமத்துவச் சிந்தனையையும் மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதத்தில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் அமைந்திட வேண்டும்“ என்று அதன் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.


இளைஞரணியின் சார்பில் தொகுதிகள்தோறும் படிப்பகங்கள் அமைக்க வேண்டும் என்ற செயல்திட்டத்தைத் தலைமைக் கழகம் வகுத்தளித்தது. பல தொகுதிகளில் தரமான நூலகங்களை இளைஞரணி உருவாக்கியிருப்பது முத்தமிழறிஞர் கலைஞருக்குப் பெருமை சேர்த்துள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் தமிழினத்தைத் தட்டி எழுப்பும் கருத்துகளை எழுதிக் குவித்தவர் தலைவர் கருணாநிதி. தமிழன்னைக்கு அணிகலனாக இலக்கியப் படைப்புகளைப் படைத்தளித்தவர். ஏராளமான நூல்களை எழுதியவர். அவர் பெயரில் நூலகம் என்பதும் அதனை எதிர்காலத் தலைமுறைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அமைத்திருப்பதும் மிகச் சிறப்பான நடவடிக்கைகளாகும். மாவட்டவாரியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தி சிறந்த 100 பேச்சாளர்களைத் தேர்வு செய்யும் பணியையும் இளைஞரணி மேற்கொண்டுள்ளது.


தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் குறுங்காணொளிகள் (ரீல்ஸ்) உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அதில் கழகத்தினர் மட்டுமின்றி, பொதுமக்களும் தலைவர் கலைஞரின் சாதனைகளை எடுத்துரைத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது. #கலைஞர் 100 என்ற ஹேஷ்டேக்கில் இவற்றைப் பார்வையிட முடியும் என்பதோடு, 2023 ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாளன்று எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அவரை வாழ்த்திப் பதிவிட்ட இந்த ஹேஷ்டேக் ஒரு மில்லியனைக் கடந்து சாதனைப் படைத்தது. அயலக அணி சார்பில் வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை அங்குள்ள கழகத்தினர் உணர்வுப்பூர்வமாக நடத்தியுள்ளனர். விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கால்பந்து, கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.


தொழிலாளர் அணி, தொண்டர் அணி, மகளிர் தொண்டர் அணி, அமைப்பு சாராத் தொழிலாளர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர்கள் அணி எனக் கழகத்தில் உள்ள ஒவ்வொரு அணி சார்பிலும் போட்டி போட்டுக் கொண்டு நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரைக் கொண்டாடி மகிழ்வதுடன், கட்சிக்கு அப்பாற்பட்ட பலரும் தங்கள் நன்றியினை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.


பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை ஊர்கள்தோறும் வளர்த்தெடுத்தவர் தலைவர் கருணாநிதி. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கழகத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக்காத்து வலிமைப்படுத்தியவரும் தலைவர் கருணாநிதிதான். அவருடைய நூற்றாண்டில் கழகத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில், புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் செயல்திட்டமும் வகுக்கப்பட்டு, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


தன்னால் கழகத்திற்கு என்ன நன்மை என்று நினைப்பவர்கள்தான் கழகத்தின் இரத்தநாளங்கள் என்றவர் கருணாநிதி. அத்தகைய இரத்தநாளங்களாகக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் செயலாற்றி, ஒரு கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, கழகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை இரண்டு கோடிக்கு மேல் உயர்த்தியிருப்பது உயிர்நிகர் தலைவர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டில் நாம் மேற்கொண்டுள்ள அரிய பணியாகும்.


நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாலும் கருணாநிதி நூற்றாண்டினையொட்டி நாம் திட்டமிட்டிருந்த ஒரு சில செயல்பாடுகள் முழுமை பெற இயலவில்லை. எனினும், தேர்தல் பணியும்கூட தலைவர் கலைஞரின் புகழ் போற்றும் பணியாகவே இருந்தது.


இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் வடஇந்தியத் தலைவர்களின் பார்வை தெற்கை நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தலைவராக நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் செயலாற்றியதும், அதன் காரணமாக ஜனநாயகம் மீட்கப்பட்டு, ஆட்சியில் நிலைத்தன்மை ஏற்பட்டதையும் எவரும் மறுக்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர் தலைவர் கருணாநிதி.


திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய்மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர். அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள். வன்மத்தைக் கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது.


ஜூன்-3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டக் கழகம் சார்பிலும், ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழகங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நிறைவுறும் இந்த ஜூன்-3 அன்று மக்கள் கூடும் இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு  மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக ‘கலைஞர் 100’ என்ற வரியுடன் கோலமிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.


ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’வின் வெற்றியைத் தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.