விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு சென்னை காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில்  பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் ; 


பாஜக மற்றும் அதை சார்ந்த அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி சேவை விழாவாக செய்து வருகிறோம். விநாயகர் சதுர்த்தியை மதம் சார்ந்த விழாவாக பாஜக பார்க்கவில்லை. மனிதம் சார்ந்த கொள்கை தான் பாஜகவின் கொள்கை. இந்து மதம் சார்ந்த கொள்கைகளுக்கு  பாதிப்பு ஏற்பட்டால் எதிர்த்து குரல் கொடுப்பவர்களாக நாங்கள் இருக்கிறோம்.


ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சென்று நாட்டைப் பற்றி மோசமாக பேசியுள்ளார் இதை வன்மையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி இந்தியன் போல பேசவில்லை அந்நியன் போல பேசியுள்ளார். பெண்களைப் பற்றி தவறாக பேசிய ராகுல் காந்தி நாட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.


மத்திய நிதியமைச்சர் , குடியரசு தலைவர்  என பெண்களுக்கு பல இடங்களில் பாஜக  முன்னுரிமை அளித்து வருகிறது. இங்குள்ள  பெண்கள் சமையல் அறையில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவசர காலத்தை உருவாக்கி பெண்களுக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தியது காங்கிரஸ் ஆட்சி. ராகுல் காந்திக்கு பெண் தலைவர்கள் என்றாலே அவரது அம்மா சோனியா காந்தியும், பாட்டி இந்திரா காந்தியும் தான் என தெரிவித்தார்.


திருமாவளவன் மதுவைப் பற்றி பேசும்போது ஏன் மதத்தைப் பற்றி பேச வேண்டும். திமுக கூட்டணியில் இருந்தால் 2026 வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்து கொண்டு விட்டார்.


திருமாவளவன் நடத்தப் போகும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா என்பது புரியவில்லை.


4 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவுடன் கூட்டணியில் இருந்த திமுக இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்து விட்டு இப்போது மது ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கான காரணம் என்ன ?


திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகள் திமுகவின் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விட்டார்கள்.தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக இருப்பதாலே தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்கள்.


அரசாங்க பள்ளிகளில் அமைச்சர்களின் பிள்ளைகளோ ,முதலமைச்சர் வீடுகளில் சேர்ந்தவர்களையோ பார்க்க முடியாது. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று கூறியது தவறு. தேசிய கல்விக் கொள்கையில் அப்பட்டமான அரசியலை ஸ்டாலின் அரசு செய்து வருகிறது.


முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் ஈர்த்துள்ள முதலீடுகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியே வரவில்லை.


3300 கோடி முதலீட்டில் மத்திய அரசு நடவடிக்கையாலே தமிழகத்திற்கு எச்பி லேப்டாப் கம்பெனி வரவுள்ளது.
மகாவிஷ்ணு கருத்தில் வேறுபாடு இருக்கலாம் ஆனால் அவரை தீவிரவாதி போல நடத்துவது தவறு.


திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார் அதற்கு தொடர்பான கைது இன்னும் செய்யவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காரணம் யார் என்று கைது செய்யவில்லை. தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் பல உள்ளது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கேட்காமல் மகாவிஷ்ணுவை தீவிரவாதி போல நடத்துகிறார்கள் என தெரிவித்தார்.