DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
"கடந்த 2021 தேர்தலின்போதே திமுக கூட்டணிக்குச் செல்ல அன்புமணி விரும்பிய நிலையில், 2026 தேர்தலில் அதை செயல்படுத்த அவர் நினைப்பதாக கூறப்படுகிறது”

திமுக அரசை பல்வேறு தருணங்களில் தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு சட்டப்பேரவையில் வைத்தே பதிலடி கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் இப்படி பேசுவார் என்று வேல்முருகன் உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்கவில்லை. அதனால், கடும் அதிருப்தியடைந்தார் வேல்முருகன். பேரவை முடிந்து வெளியே வந்து பேட்டி அளித்த அவர், தமிழுக்காக பேசப் போன என்னை தவறாக முதல்வர் புரிந்துக்கொண்டார் என்றும் முதல்வரிடம் தவறாக சொன்னது அமைச்சர் சேகர்பாபுதான் என்றும் செய்தியாளர்கள் மத்தியில் அவர் போட்டுடைத்தார்.
ஒருமையில் பேசினாரா சேகர்பாபு..?
சேகர்பாபு தன்னை பேரவையில் வைத்தே ஒருமையில் பேசியதாகவும் அதற்குதான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பேசினார் வேல்முருகன். அதிமுகவை குறைச் சொன்னால் சேகார்பாபுவிற்கு ஏன் கோபம் வருகிறது ? தமிழ் குறித்து பேசினால் அதை தடுக்க சேகர் பாபு ஏன் முந்திக்கொண்டு வருகிறார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை வேல்முருகன் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் கேட்டிருந்தார்.
வேல்முருகன் செயல்பாடுகள் மீது முதல்வர் அதிருப்தி?
இந்நிலையில், வேல்முருகன் தொடர்ந்து திமுக அரசை குறை கூறுவதை வாடிக்கையாக வைத்துக்கொண்டிருப்பதாகவும் இதற்கு பதிலடி கொடுக்காமல்விட்டால் அதனை மற்ற கூட்டணி கட்சியினர் பின்பற்றத் தொடங்கிவிடுவர் என்று கட்சியின் சீனியர்கள் முதல்வரிடம் தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையிலேயே ’வேல்முருகன் அதிகபிரசங்கித் தனமாக’ நடந்துக்கொள்கிறார் என்ற வார்த்தையை முதல்வர் உதிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூட்டணிக் கணக்கு மாறுகிறதா?
ஆனால், இது மட்டுமே காரணமில்லையென்றும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்க இப்போதே திமுக தயாராகி வருகிறது என்றும் அதற்கான ஆரம்ப சுழியாகவே இதுபோன்ற விவகாரங்கள் வெடித்து வருகிறது என்றும் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். வேல்முருகனை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு பாட்டாளி மக்கள் கட்சியை திமுக கொண்டுவரும் ஒரு முயற்சியாகவும் இதனை பார்க்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.
இல்லையென்றால், தன்னுடைய கூட்டணிக் கட்சி தலைவர் ஒருவரை பேரவையில் வைத்தே முதல்வர் இதுபோன்று பேசியிருக்க மாட்டார் என்றும் ஒருவேளை வருத்தம் இருந்தாலும் கூட தொலைபேசியிலோ அல்லது நேரிலோ கூட அழைத்து பிரச்னையை கேட்டு, அதனை முடிவுக்கு கொண்டுவந்திருப்பார் என்றும் கூறுகின்றனர்.
பாமகவிற்கு மறைமுக அழைப்பா ?
அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அது நடக்காது என்று அறுதியிட்டு எதையுமே அரசியலில் சொல்ல முடியாது. அதிமுக அமைச்சர்களை டயர் நக்கிகள் என்று பேசிவிட்டு பின்னர் மீண்டும் அதிமுகவோடு கூட்டணி வைத்தார் பாமக தலைவர் அன்புமணி. இந்நிலையில், வன்னியர்கள் மத்தியில் செல்வாக்கோடு இருக்கும் வேல்முருகனை காட்டிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வட மாவட்டங்களில் அதிக செல்வாக்கு இருப்பதால், வரும் 2026 தேர்தலில் பாமகவோடு கூட்டணி போட திமுகவின் சில சீனியர்கள் இப்போதே அச்சாரம் போட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
Delimitation கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் அன்புமணி பங்கேற்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட நிலையில், பாஜகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக திமுக அரசு கூட்டிய கூட்டத்தில் அன்புமணி பங்கேற்றது திமுகவினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தொடர்ந்து வேல்முருகன் திமுக அரசை விமர்சித்தும் அமைச்சர்களை வசைப்பாடியும் வரும் நிலையில், அவருக்கு செக் வைக்கும் விதமாக பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
என்ன செய்வார் திருமாவளவன்?
பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம் பெறாது என்று ஏற்கனவே அறிவித்த தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருந்து வருவதால், ஒருவேளை பாமகவை கூட்டணியில் சேர்க்கும் முடிவை திமுக எடுத்தால், அதன் மூலம் விசிகவை இழக்கும் நிலை ஏற்படும்.
அதனால், திமுக சீனியர்களில் சிலர் பாமகவை திமுகவிற்கு கொண்டு வரும் முன்னெடுப்பை எடுத்தாலும் திருமாவளவனை இழக்க விரும்பாத முதல்வர் மு.க.ஸ்டாலின், விசிகவையே திமுக கூட்டணியில் தக்க வைக்க நினைப்பார் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.