தமிழக அரசியல் களம் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு, தமிழக அரசியல் பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளானது.
அரசியல் களத்தில் விஜய்:
தனது முதல் மாநாட்டில் தனது கொள்கைகள், கோட்பாடுகள், செயல்திட்டங்களை அறிவித்த விஜய் தன்னுடைய அரசியல் எதிரி தி.மு.க. என்றும், கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும் உறுதிபட கூறினார். மேலும், விஜய் பா.ஜ.க.வை காட்டிலும் தி.மு.க. மீதே கடும் விமர்சனத்தையும், தாக்குதல் அரசியலையும் நடத்தி வருகிறார்.
முதல் அரசியல் மாநாட்டிற்கு பிறகு வெளியில் வராத விஜய், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களைச் சந்தித்தபோது பேசிய கருத்துக்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே அரசியல் நிபுணர்களும், அரசியல் கட்சிகளும் கருதுகின்றனர்.
விஜய்க்கு எதிராக அஜித்:
இதனால், விஜய்க்கு எதிராக பல வியூகங்களை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளனர். அதில், விஜய்க்கு எதிராக அவர்கள் கையில் எடுத்துள்ள முக்கிய அஸ்திரம் அஜித். தமிழ் சினிமாவில் விஜய்க்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகர் அஜித் மட்டுமே. விஜய் படங்களுடன் நேரடியாக மோதும் அளவிற்கு படத்தை வெளியிடும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் அஜித்.
விஜய்யைப் போலவே கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித் ரசிகர்களின் ஆதரவைப் பெற அரசியல் கட்சிகள் துடித்து வருகின்றனர். தனக்கும், அரசியலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அஜித் வெளிப்படையாக அறிவித்தாலும், வரும் தேர்தலில் விஜய்யை வீழ்த்த மிகப்பெரிய அஸ்திரமாக அஜித்தே இருப்பார் என்று அரசியல் கட்சிகள் கருதுகின்றன.
பாராட்டும், பத்மபூஷணும்:
இதன் காரணமாகவே, தற்போது கார் பந்தயத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வரும் அஜித்திற்கு தொடக்கம் முதலே திமுக அமைச்சர்கள் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்தனர். அவரது பந்தய காரில் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முத்திரை இருப்பதால்தான் பாராட்டியதாக காரணங்கள் கூறப்பட்டாலும், தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கும் விஜய்யின் போட்டி நடிகரான அஜித் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியாகவும் இது பார்க்கப்பட்டது.
மேலும், யாருமே எதிர்பாராத வகையில் நடிகர் அஜித்திற்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. விஜய் மிக கடுமையாக விமர்சிக்கும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரியான பா.ஜ.க., அவருக்கு எதிராக அஜித் ரசிகர்களை திருப்பும் விதத்தில் இந்த விருது தற்போது திடீரென வழங்கப்பட்டுள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அஜித்திற்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டபோது அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அஜித் - ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தே வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், அஜித்தின் பிறந்த நாளுக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
வியூகம் வகுக்கும் அரசியல் கட்சிகள்:
அரசியலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று அஜித் கூறினாலும், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது பெயர் அதிகளவு அரசியல் கட்சியினரால் பயன்படுத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னோட்டங்கள்தான் மேலே நிகழ்ந்த சில சம்பவங்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறியதால், அவரது ரசிகர்கள் அரசியல் நடவடிக்கையில் பெரிதும் ஈடுபடுவதில்லை. மேலும், இணையத்தில் நடக்கும் விஜய் ரசிகர்கள் - ரஜினி ரசிகர்கள் மோதல், விஜய் - அஜித் ரசிகர்கள் மோதலையும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.