தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளை கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
“கூட்டணி வைக்க வேண்டும் என்றால் 40 தொகுதிகள் வேண்டும்“
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தொகுதி வாரியாக நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, பிரேமலதாவிடம் நிர்வாகிகள் பல்வேறு முக்கிய கருத்துக்களை முன்வைத்ததாக தெரிகிறது. அதன்படி, எந்த கட்சியுடன் கூட்டணிக்கு சென்றாலும், அவர்களிடம் 40 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், தேமுதிக-விற்கு யார் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களோ, அவர்களுடனேயே கூட்டணி வைக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். ஏனென்றால், கடந்த தேர்தலின் போது அதிமுக தங்களை சரியாக மதிக்கவில்லை என்றும் முழுமையான ஒத்துழைப்பை தரவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நிர்வாகிகள் வைத்த மற்ற கோரிக்கைகள் என்ன.?
அதோடு ஒரு முக்கிய கோரிக்கையாக, தேமுதிக-விற்கான தொலைக்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல், 6 மாதங்களுக்கு ஒரு முறை பல்வேறு தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், தேமுதிகவிற்கு சாதகமாக உள்ள தொகுதிகளை கண்டறிந்து, அந்த தொகுதிகளை பலப்படுத்துவதுடன், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது அந்த தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதோடு, கட்சிக்காக செலவு செய்வதற்கு நிர்வாகிகளிடம் போதிய அளவிற்கு பணம் இல்லை என்றும், தேர்தல் செலவுகளுக்காக தலைமைக் கழகத்தில் இருந்து பணம் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
“அதிமுக, பாஜக எதுவும் செய்யவில்லை“
மொத்தத்தில், பாஜக, அதிமுக கூட்டணி நமக்கு எதுவும் செய்யவில்லை என்றும், அதனால், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் எனவும், தேமுதிகவிற்கு அங்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தலுருக்கான நாட்கள் வேகமாக கரைந்து வரும் நிலையில், முக்கிய கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. ஆனால், தேமுதிக அந்த விஷயத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. எந்த பக்கம் சாய்வது என்ற முடிவை இன்னும் அந்த கட்சியின் தலைமை எடுக்கவில்லை.
சரியான நேரம் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் என பிரேமலதா விஜயாகாந்த் கூறி வருகிறார். அந்த நேரம் எப்போது வருமோ என அக்கட்சியின் தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர்.