உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூன்.24) அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 


நலம் விசாரித்த பிரதமர்


முன்னதாக விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பிரேமலதா விஜயகாந்திடம் தொலைபேசியில் நலம் விசாரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.


மேலும், விஜயகாந்த்தின் கால் விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததாலும், ரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு கூடிய நிலையிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் விஜயகாந்தின் வலது கால்களில் இருந்த மூன்று விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.


தேசிய முற்போற்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வரும் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.


கட்சி தொடர்பான பணிகளிலும் அவர் பெரிதாக ஈடுபடுவதில்லை. அவரது குடும்பத்தினரே அதை கவனித்து வருகின்றனர். முன்னதாக கடந்த ஜூன் 14ஆம் தேதி விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், ஓரிரு நாள்களில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


கொரோனா தொற்று


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2020ஆம் ஆண்டு  வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது சில அறிகுறிகளை தொடர்ந்து கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 


அதனைத்தொடர்ந்து  10 நாட்கள் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அதன் பின் கொரோனாவிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் விஜயகாந்த்  மீண்டும் பரிசோதனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும், விஜய் மில்டன் இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவர உள்ள மழை பிடிக்காத மனிதன் எனும் திரைப்படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விஜயகாந்த் இல்லாமலேயே படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்