நடிகர் விஜய்காந்தின் புதிய புகைப்படம் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய கேப்ஷனை பதிவிட்டிருக்கிறார் விஜயகாந்த். இதன் மூலம், வைரலான அந்த புகைப்படம் உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது.


அவர் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவில், ”நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களை, நேற்று (27/02/2022) தேமுதிக தலைமைக்கழகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தேன். மேலும் கழக நிர்வாகிகளுடனும், எனது உதவியாளர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகிழ்ச்சியான தருணம்...” என தெரிவித்திருக்கிறார்.



கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, கடைசி நேரத்தில் கேட்ட இடங்கள் கிடைக்காத காரணத்தால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. அதனைத்தொடர்ந்து அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, 60 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட தேமுதிக வெற்றியை பதிவு செய்யவில்லை. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், தேமுதிக பெரிதாக சோபிக்க வில்லை. 


இதனையடுத்து நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் ,தேமுதிக தனித்து களமிறங்கியது. தேர்தல் நெருங்கிய கடைசி கட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 1200 க்கும் மேற்பட்ட இடங்களில் தேமுதிகவினர் போட்டியிட்டனர். 


ஆனால் மாநகராட்சிகளில் ஒரு வார்டில்கூட தேமுதிக வெற்றி பெறவில்லை. நகராட்சிகளில் 12 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 23 இடங்களில் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றது. இது தேமுதிக தொண்டர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கியது. இந்த நிலையில் அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த், “தோல்வியுற்றவர்கள் எதற்கும் கலங்க வேண்டாம், துவண்டு விட வேண்டாம். நமக்கு என்று ஓர் எதிர்காலம் கட்டாயமாக இருக்கிறது என்ற நம்பிக்கையோடு பயணிப்போம். இந்த தேர்தலை பொறுத்தவரை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக ஏற்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். 


2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த விஜயகாந்த்,  கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். உடல்நலக்குறைவின் காரணமாக, விஜயகாந்தால் அரசியலில் பெரிதளவில் பங்களிக்க முடியவில்லை. பல்வேறு கட்ட சிகிச்சைகளை மேற்கொண்ட பின்னரும் விஜயகாந்தால் மீண்டும் பழைய உடல்நிலையை மீட்டெடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் அவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண