தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சத்யராஜ். பெரியாரின் தீவிர ஆதரவாளர். இவரது திரைப்படங்களிலும் கடவுள் மறுப்புக் கொள்கை வசனங்கள் இடம்பிடித்துள்ளது. திராவிட கட்சிகளின் கொள்கைகளைத் தீவிரமாக பின்பற்றி வருபவர் நடிகர் சத்யராஜ். மேலும், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர்.
தி.மு.க.வில் சத்யராஜ் மகள்:
இந்த நிலையில், சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஓரிரு தினங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் இணைந்த திவ்யா சத்யராஜுற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், சத்யராஜ் குடும்பத்திற்குள் ஒரு திடீர் குழப்பம் வெடித்துள்ளது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், இவர் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ளார். இவருக்கு பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகிலும் பல முன்னணி நடிகர்கள் ரசிகர்களாக உள்ளனர். அவர்களில் சத்யராஜ் மகன் சிபிராஜும் ஒருவர்.
தவெக ஆதரவாளராக சிபிராஜ்:
இவர் பல பேட்டிகளில் விஜய்யின் தீவிர ரசிகன் தான் என்பதைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 17ம் தேதி அதாவது காணும் பொங்கல் தினத்தில் இவர் தனது எக்ஸ் பக்கத்தில் தனது சுயவிவரத்திற்கு கீழே நடிகர்/ கூத்தாடி என்று பதிவிட்டிருந்தார். அவருக்கு தவெக செய்தித்தொடர்பாளர் லயோலா மணி நன்றி தெரிவித்திருந்தார். திரைத்துறையில் இருந்த அரசியலில் கால்தடம் பதித்த விஜய்யை கூத்தாடி என்று சிலர் விமர்சித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், சிபிராஜ் தன்னையும் கூத்தாடி என்று குறிப்பிட்டு விஜய்க்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இவர் தனது சுய விவரத்தை கூத்தாடி என்று மாற்றிய இரண்டாவது நாளில், அவரது தங்கை தி.மு.க.வில் இணைந்துள்ளார். தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரான சத்யராஜ், நடிகர் விஜய்யுடனும் நெருக்கமான நட்பு கொண்டவர். விஜய்யுடன் இணைந்து நண்பன், கத்தி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கட்டப்பா வீட்டில் மல்லுக்கட்டு:
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. மோதல் ஏற்பட்டிருக்கும் சூழலில் மகன் தவெக ஆதரவாளராகவும், மகள் தி.மு.க. உறுப்பினராகவும் மாறி நிற்கும் நிலையில் சத்யராஜ் குடும்பத்திற்குள் இதனால் மோதல் பனிப்போர் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகனும், மகளும் எதிரெதிர் துருவங்களாக நிற்கும் கட்சிகளுக்கு ஆதரவாளராக மாறியிருக்கும் சூழலில், கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சத்யராஜ் இதனால் வேதனை அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.