அமமுகவில் இருந்த பலர், குறிப்பாக பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த பின், அதிமுகவில் இணைய சிலர்விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அப்போதே அவர்களை இணைக்க அதிமுக தலைமை மறுத்துவிட்டது. குறிப்பாக இபிஎஸ் கறாராக இருந்தார். அமமுகவில் இருந்த போது, தங்களுக்கு நெருக்கடியாகவும், கட்சிக்கு எதிராகவும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்களை இணைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் தேர்தல் நேரத்திலாவது மனம் மாறி ஏற்பார்கள் என்கிற எண்ணத்தில் பலர் விட்ட தூதுகள், சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்தது. ஓட்டுக்காக கூட அமமுக மாஜிக்களை இணைக்க கூடாது என்பதில் அதிமுக தலைமை அப்போதும் உறுதியாக இருந்தது. தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என பொறுமையாக இருந்தனர்.
தேர்தல் முடிந்தும் அது நடைபெறவில்லை. இதற்கிடையில் சசிகலா பலரிடம் பேசி, அந்த ஆடியோவும் வெளியானது. சசிகலா கரம் வலுப்பெறும் நாம் இணைந்து விடலாம் என காத்திருந்தனர். ஆனால், சசிகலா உடன் பேசியவர்களை விளக்கம் கேட்காமலே கட்சியை விட்டு தூக்கி வீசியது அதிமுக தலைமை. இந்த அதிரடி நடவடிக்கையை சசிகலாவே எதிர்பார்க்கவில்லை. கட்சியினரை நீக்க மாட்டார்கள், எச்சரிப்பார்கள், பேசுவார்கள் என்று தான் சசிகலா நினைத்தார். ஆனால் நினைத்தது வேறு மாதிரி இருந்தது. அதிமுகவின் அஜண்டா ஒன்று தான். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருக்கத்தில் இருந்தாலோ, தொடர்பில் இருந்தாலோ அவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவர். அதில் அதிமுக தலைமை உறுதியாக இருந்தது. சசிகலா உடன் பேசியதற்கே கட்சியை விட்டு நீக்குகிறார்கள், இவர்கள் எப்படி சசிகலா தலைமையை ஏற்பார்கள் என்கிற கேள்வி நீக்கப்பட்டவர்களுக்குள் தற்போது எழுந்துள்ளது. இரண்டாம் கட்ட தலைவர்களும் சசிகலாவை எதிர்த்து கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இனி சசிகலாவை நம்புவதில் எந்த பயனும் இல்லை என்கிற முடிவுக்கு அவரால் பதவியை இழந்தவர்கள் சிலர் முடிவு செய்து, தற்போது திமுகவில் இணைந்துள்ளனர்.
சசிகலா உடன் பேசியதால் சமீபத்தில் அதிமுகவில் நீக்கப்பட்ட மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் திமுகவில் இணைந்துள்ளார். சசிகலா தலைமையை ஏற்கிறேன் என்பது தான் அவரது பேச்சின் சாரம்சம். அதனால் அதிமுகவில் நீக்கப்பட்டார். முறையாக அவர் சசிகலா தலைமைக்கு காத்திருக்க வேண்டும். ஆனால் அவர் திமுகவில் இணைந்திருக்கிறார் என்றால், சசிகலா மீது நம்பிக்கை இழந்திருக்கிறார் என்று தான் அர்த்தம். சசிகலாவிற்கு எதிராக அதிமுக தலைமை உறுதியாக இருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, அதிமுக தலைமைக்கு மாற்றாக டிடிவி தினகரனின் தலைமையை ஏற்று சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கெனடி, ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்திருக்கிறார்கள். இவர்களை அதிமுக ஏற்கவில்லை என்பது ஒரு காரணம் . ஆனால், அவர்கள் நம்பிச் சென்றவர்கள், அதிமுகவை கைப்பற்ற முடியாது என்பதை உடனிருந்த இவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால், மாற்று வழியை தேடிச் சென்றுள்ளனர். உண்மையில் இது சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கும் சவாலான தருணம். இனி சசிகலா உடன் பேசுவோர் கவனமாக இருப்பார்கள். பதவி பறிக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்படுவது ஒருபுறம், அடுத்து அரசியல் எதிர்காலம் என்ன என்கிற அச்சம் ஒருபுறம் என்பதை தான இந்த சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுஒருபுறம் என்றால், ‛அதிமுகவில் இருந்தவர்களை அமமுக மூலம் பிரித்து தற்போது அவர்களை திமுகவிற்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்,’ என சசிகலா மீதும் அவரது குடும்பத்தார் மீது அதிமுக தலைவர்கள் எளிதில் குறை கூற நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை வைத்து பார்க்கும் போது இது சசிகலாவிற்கு தான் நெருக்கடியான காலம்.