மத்தியில் மூன்றாவது முன்னணிக்கான வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. 2024 தேர்தலுக்கு இன்னும் மூன்றாண்டுகள் இருந்தாலும் பாரதிய ஜனதாவைப் அப்புறப்படுத்த இப்போதே தயாராகி வருகின்றன மாநிலக் கட்சிகளின் கூட்டணிகள். ’நட்பக்கூடக் கற்பைப் போல எண்ணுவேன்’ என பாரதிய ஜனதாவுடன் ப்ரெண்ட்ஷிப் கோல்ஸ் கொண்டாடும் மாநிலக் கட்சியான சிவசேனா தேர்தல் அரசியல் என வந்தால் நண்பனெல்லாம் இரண்டாம்பட்சம் என தேசியவாத காங்கிரஸுடனான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது. மாநிலத்தில் எதிரும் புதிரும் என்றாலும் பா.ஜ.வை ஓரங்கட்டுவது என வந்துவிட்டால் எதிரிக்கு எதிரி நண்பன் என சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜும் ஒரு பக்கம் பட்டும் படாததொரு நட்பை வளர்த்து வருகின்றன. 




இந்திய அரசியலில்  இதுபோன்ற எதிர்பாராத ஆண்டி க்ளைமாக்ஸ் கூட்டணிகள் புதிதல்ல. பாரதிய ஜனதா அல்லாத ஆட்சி என தற்போதைய கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது போன்று 30 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைக்க வி.பி.சிங் என்னும் தனியொரு நபர் தலைமையில் தெலுங்கு தேசம், தி.மு.க., அசோம் கன பரிஷத், பா.ஜ.க., இடதுசாரிகள் என அனைத்து கட்சிகளும் அணிதிரண்டன. வி.பி.சிங் தீவிர காங்கிரஸ்காரர், ராஜீவ் காந்தி அரசின் நிதித்துறை அமைச்சர் அமிதாப்,அம்பானி என பெரும்புள்ளிகளின் வீடுகளில் நடத்திய ரெய்டுகள் காரணமாக பாதுகாப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். அங்கே போஃபர்ஸ் பேரத்தை வெளிக்கொண்டுவந்தார், காங்கிரஸிலிருந்து வெளியேறி ஜனதா மோர்ச்சாவைத் தொடங்கினார். அவரது குறிக்கோள் எல்லாம் காங்கிரஸை அப்புறப்படுத்துவதில்தான் இருந்தது, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தார், பிரதமரானார்.




படாடோபம் இல்லாத அமைதியான உருவம், மன்கி பாத் இல்லை, பி.ஆர்.ஓ.ப்ரமோக்கள் இல்லை. ஆட்சி செய்தது ஒருவருடத்துக்கும் காலம்தான்.  வல்லின அரசியலுக்கு எல்லாம் இவர் சரிவர மாட்டார் என காங்கிரஸ் கட்சியினராலேயே விமர்சிக்கப்பட்டவர். ஆனால் அந்த அமைதியான உருவம்தான் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது, கூட்டணிக் கட்சியாகவே இருந்தாலும் பாரதிய ஜனதாவின் ராமர் கோவில் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்தது,  தனக்குச் சரியெனப்பட்டதை ஊரே எதிர்த்தாலும் செய்தது. 


சமூகப் பொருளாதார அளவில் பின் தங்கியவர்களைக் கண்டறிய 1979ல் மொரார்ஜி தேசாயால் நிறுவப்பட்டது மண்டல் கமிஷன். இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு வேலைகளில் 27 சதவிகித இடஒதுக்கீடு உட்படப் பல அனல் பறக்கும் பரிந்துரைகளைக் கமிஷன் கொண்டுவந்தது. தேசாய் அது தேசத்துக்குச் சரிவராதென்று ஒதுக்கினார். இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் அது புற்றைக் கிளறும் வேலை எனப் புறந்தள்ளினார்கள். தேசாயும் காந்திக்களும் ஒதுக்கியதை தான் தலைமையேற்றுச் செய்துமுடித்தார் விஷ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங். 1990 ஆகஸ்ட் 15ல் செங்கோட்டையில் இதற்கான அறிவிப்பை முழங்கினார். கூட்டணியான பாரதிய ஜனதா இதனை எதிர்த்தது, மாணவர்கள், மந்திரிகள், அரசு அதிகாரிகள் என மேல்தட்டு மக்கள் கூட்டம் அத்தனையும் இந்த அறிவிப்புக்கு எதிராகக் கொந்தளித்தது. அவரை பதவிவிலகச் சொன்னது. முகத்தில் எவ்விதச் சலனமும்மின்றி அவர் சொன்னதெல்லாம் ஒன்றுதான்,’நான் தீவிரமாக நம்புமொரு கொள்கையா? அல்லது எனது பதவியா?’ என்றால் விநாடிகள் கூட யோசிக்காமல் என் பதவியை துச்சமெனத் தூக்கியெறிவேன்’ என்றார். 




மாணவர்கள் தீக்குளித்தார்கள், இந்துக்கள் வாக்குகள் தனக்கு எதிராகச் சரிவதை உணர்ந்த பாரதிய ஜனதா ராமஜென்ம பூமிக்கான ரதயாத்திரையை எல்.கே.அத்வானி தலைமையில் ஒருங்கிணைத்தது. கலவரத்தை தூண்டியதாக கூட்டணிக்கட்சித் தலைவர் என்றும் பாராமல் அத்வானியைக் கைது செய்யச் சொன்னார் வி.பி.சிங். 




விளைவு அவருக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டது பாரதிய ஜனதா. நவம்பர் 1990ல் பதவிவிலகிய வி.பி.சிங் ‘எத்தகைய நாட்டை உருவாக்க நீங்கள் விரும்புகிறீர்கள்?’ என அன்று எழுப்பிய கேள்விதான் இந்துத்துவ அடிப்படைவாதத்துக்கு எதிரான முற்போக்காளர்களின் முதல் கணை.  


ரத்தப் புற்றுநோயால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த சிங் 2008 நவம்பரில் இயற்கை எய்தினார். தன் இறப்புக்கு மூன்று வருடத்துக்கு முன்பு அளித்ததொரு பேட்டியில்,’ பாரதிய ஜனதாவும் எனது புற்றுநோயும் ஒன்று. அந்தக் கட்சியில் எனக்கு நண்பர்கள் இருந்தாலும் சிறுபான்மைக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான அவர்களது வெறுப்பரசியலைச் சகித்துக்கொள்ள முடியாது’ என்றார். புற்றை எதிர்த்துப் போராடுவது ஒருவகையில் பேரிழப்புதான் ஆனால் போராடாமல் விட முடியாது என்றவர்.  


கடுகைத் துளைத்து மனிதநேயத்தை மலையெனப் புகுத்திய மாமனிதரின் பிறந்ததினம் இன்று!