தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் `ஜெய் பீம்’ திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு அளிப்பதாகத் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மூத்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஏற்கனவே நடிகர் சூர்யாவுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், ட்விட்டரில் #WeStandwithSurya என்ற ஹாஷ்டேக் தொடர்ந்து டிரென்டிங்கில் இடம்பெற்று வருகிறது.
இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்திலும், நடிகர் சூர்யா நடிப்பிலும் தயாரிப்பிலும் சமீபத்தில் வெளியானது `ஜெய் பீம்’ திரைப்படம். அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டில் வாழும் இருளர் பழங்குடியினர் மீதான காவல்துறையினரின் அடக்குமுறை குறித்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தில் காட்டப்பட்டிருந்த காவல்துறை அதிகாரியின் வீட்டில் வன்னியர்களின் சாதிச் சின்னம் இருந்ததாக சர்ச்சைகள் எழுந்தது. அதனையடுத்து படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் அந்தக் காட்சியில் சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிகளை மாற்றியதாக அறிவித்தார். எனினும் வன்னியர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கம் முதலான அமைப்புகள் நடிகர் சூர்யா நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என `ஜெய் பீம்’ படத்தையும், நடிகர் சூர்யாவையும் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா அன்புமணி ராமதாஸ் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகக் கடிதம் ஒன்றை வெளியிட்டார். மேலும், `ஜெய் பீம்’ படத்திற்கு ஆதரவு அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலானோருக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதினார் நடிகர் சூர்யா. அதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா மீதான சர்ச்சைகளில் அவருடன் நிற்பதாகத் திரைப் பிரபலங்களான இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் பாரதி ராஜா, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதலானோர் ட்விட்டரில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், `சரியான செயலைச் செய்ததற்காக யாரையும் குறைவாக எண்ணிச் செய்யக் கூடாது. நட்சத்திர அந்தஸ்தை வேறு விதமாக மாற்றும் ஒரு நட்சத்திரம், சூர்யா’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், `பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை உலகிற்கு எடுத்துச் செல்ல உழைத்த இயக்குநர் டி.ஜே.ஞானவேல், சமூக நீதிக்காக திரையிலும், திரைக்கு வெளியிலும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் அதிக ஊக்கம் தருகிறார்கள். சமூகத்தில் உள்ள அடக்குமுறைகள் களையப்படக் கூடாது என நினைப்பவர்களுக்கு இந்தப் படம் கோபம் உண்டாக்குவது இயல்பு. சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளையும், அநீதியையும் கேள்வி எழுப்பும் திரைப்படங்களும் சமூக நீதிக்கு ஆதரவான செயல். நடிகர் சூர்யாவுடனும், `ஜெய் பீம்’ படக்குழுவினருடனும் நிற்கிறோம்’ என்றும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.