அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் பலவந்தமாக கையாண்டதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.


பா.ரஞ்சித் கண்டனம்


புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களை கையாண்ட விதத்திற்காகவும் ஏழு பெண் மல்யுத்த வீரர்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம் .பியுமான பிரஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததற்கும் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.


“உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை பறைசாற்றிய  சாம்பியன்கள் எந்தவித கண்ணியமும் மரியாதையும் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளனர். வெற்றியாளர்கள் தங்கள் வென்ற  பதக்கங்களை கங்கை  ஆற்றில் வீசும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு  எந்த விளக்கமும் அளிக்காதது அவமானத்திற்குரியது.”பாதிக்கப்பட்ட  மல்யுத்த வீரர்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அரசு குற்றம்சாட்டப்பட்ட மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம் .பியுமான பிரஜ் பூஷனை பதவியிலிருந்து நீக்கி உரிய தண்டனை வழங்க வேண்டும் ” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.


மல்யுத்த வீரர்கள் போராட்டம்


பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பாஜக எம்,பி. பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை கோரி பல நாட்களாக மல்யுத்த வீரர்கள் போராடி வந்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக சென்ற அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் வென்ற தங்கள் பதக்கங்களை கங்கையில் வீச சென்ற மல்யுத்த வீரர்களை, விவசாயிகள் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இந்த நிலையில்தான், இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


உலக மல்யுத்த கூட்டமைப்பு


”கடந்த சில மாதங்களாக மல்யுத்த சமெளனத்தின் தலைவர் பிரஜ்  பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்தையும். குற்றம்சுமத்தப்பட்டவர் மீது அரசு எந்தவிதமான அதிகாரப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காததை மிகவும் வருத்தத்துடன் கவனித்து வருகிறது. மல்யுத்த வீரர்களின் பேரணியை தடுத்து வீரர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிறோம். இது குறித்து பக்கசார்பற்ற ஒரு விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .  நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்யும் எனவும் வீரர்கள் எந்த நாட்டையும் சாராத நடு நிலை கொடியின்கீழ் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்றும் தெரிவித்துள்ளது