சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 9 நாட்களுக்குப் பிறகு இன்று இரவு சென்னை திரும்புகிறார். டோக்கியோவிலிருந்து சென்னை கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினை ஜப்பான் நாட்டின் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் வழியனுப்பி வைத்தார்.
பொருளாதாரத்தை மேம்படுத்த இலக்கு:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் விதமாக, வரும் 2030-31ம் நிதி ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படுத்துவதை இலக்காக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நோக்கத்துக்காக பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை தமிழக தொழில் துறை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் வரும் 2024 ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும், பல்வேறு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 23ம் தேதி அன்று வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
சிங்கப்பூரில் ஸ்டாலின்:
முதலில் சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலின் டெமாசெக், செம்கார்ப், கேப்பிட்டாலேண்டு இன்வெஸ்ட்மென்ட் நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்தார். தொடர்ந்து, இந்தியா - சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில்துறையை சார்ந்த 350 க்கும் அதிகமான வணிக நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் கலந்துகொண்டார். அதன் முடிவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூரை சேர்ந்த முக்கிய நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேபோல் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய நிகழ்வுகளிலும் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
ஜப்பான் பயணம்:
சிங்கப்பூர் பயணத்தை முடித்த கையுடன் அங்கிருந்து நேராக ஜப்பான் சென்றடைந்தார் ஸ்டாலின். அங்கு தலைநகர் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய முக்கிய நகரங்களுக்கு சென்ற முதலமைச்சர், அந்நாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததோடு, இங்கு தொழில் தொடங்கவும் அழைப்பு விடுத்தார்.
அதேபோல், வெளிநாடு வாழ் தமிழர்கள் சங்கத்தின் சார்பில், ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் கலந்துகொண்டார். டோக்கியோவில் ஸ்டாலின் தங்கி இருந்தபோது 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்க ரூ.818 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. அதோடு, 128 கோடி ரூபாயில் மருத்துவ உபகரண உற்பத்தி தொழிற்சாலை தொடங்க ஓம்ரான் நிறுவனத்தோடும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, ஜப்பானில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக கேட்டறிந்தார்.
சென்னை திரும்பும் ஸ்டாலின்:
இதையடுத்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் தனது 9 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு 10 மணியளவில் சென்னை திரும்புகிறார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்க, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.