கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையை துவக்கினர். 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பாக திரண்டனர். நேரம் ஆக ஆக தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. 


300-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திரண்டதால், 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் ஆகிய 8 அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் முகாமிட்டனர். 




திடீர் ரெய்டு, மக்கள் கூட்டம் என பரபரப்பான வேலுமணி வீட்டு முன்பு திடீரென உணவுகளும், குளிர்பானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து போராட்டம் செய்வதும், சற்று நேரம் ஓய்வும் என தொடர்ந்த அதிமுக தொண்டர்களுக்கு அவ்வப்போது தேநீர், குளிர்பானம், பிஸ்கட், உணவு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.


பொதுவாக ரெய்டு என்றால் சம்பந்தப்பட்ட நபரே அதிர்ச்சியடையும் அளவுக்கு அதிகாரிகள் செயல்படுவார்கள். ஊடகம் வெளியிட்டால்தான் தகவலே வெளியே தெரியும். அந்த அளவுக்கு துரிதமாகவும், ரகசியமாகவும் நடப்பதுதான் ரெய்டு. ஆனால் வேலுமணி வீட்டில் நடந்த சம்பவங்கள் இது ரகசியமாக நடந்த ரெய்டா என்ற சந்தேகத்தை அதிகாரிகளுக்கு கிளப்பியுள்ளது. அதிமுக தொண்டர்கள் கூட்டம் கூடியதும் பாக்கெட்டுகளில் வந்திறங்கிய உணவும், குளிர்பானமும், தேநீரும் ஏதோ திருவிழாவுக்கு தேதி வைத்து நடந்தது போல இருப்பதாக போலீசார் சந்தேகின்றனர். 




அதேபோல எப்போதும் பட்டினப்பாக்கம் அடுக்குமாடி  வீட்டில் இருக்கும் வேலுமணி திடீரென ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி எம்.எல்.ஏ. விடுதிக்கு சென்றது ஏன்? இது எதார்த்தமா? அல்லது விவரம் தெரிந்து சென்றாரா என பல்வேறு கேள்விகள் போலீசாரிடையே எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தால் வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டே வீண் தானோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வரும் தகவல் எங்கேயோ கசிந்தி இருக்கலாம் எனவும் இதனால் ஆவணங்கள், பணத்தை வேலுமணி வேறு இடத்திற்கு மாற்றியிருக்க வாய்ப்புண்டு எனவும் சந்தேகிக்கிறார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார். இந்த சந்தேகங்களால் துறை ரீதியாக விசாரணையை முடக்கியுள்ளதாம் லஞ்ச ஒழிப்புத்துறை.