விழுப்புரம் : இந்தியா கூட்டணிக்கு இது ஒரு பாடம், எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இனிமேல் இதுபோன்ற பிளவு படாமல் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து வருங்காலத்தில் செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் டெல்லி தேர்தல் முடிவுகள். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி.
 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி:

 

ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரையில் தமிழக முதல்வர் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளுக்காக மக்கள் கொடுத்திருக்கிற அமோக வெற்றி. குறிப்பாக மகளிர் உட்பட எல்லோரும் சேர்ந்து தமிழக முதல்வருக்கு அளித்துள்ள ஆதரவு என்பது இந்த இடைத்தேர்தலில் நிரூபணம் ஆகியுள்ளது. எந்த அமைச்சர்களும் பிரச்சாரம் செய்யாமல் மாவட்ட அமைச்சர் முத்துசாமி தலைமையில் தொகுதி மக்கள் மட்டுமே பணி செய்து இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளனர்.

 

இது தமிழக முதல்வரின் சாதனைக்கு கிடைத்த வெற்றி இந்த வெற்றி இதோடு நின்று விடாது. 2026-ல் 200க்கும் மேல் வெற்றி பெற வேண்டுமென முதல்வர் கூறியுள்ளார் ஆனால் நடைபெறவுள்ள 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இடைத்தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டவர் டெபாசிட் இழந்துள்ளார். ஈரோடு தேர்தல் 2026 தேர்தலுக்கான முன்னோட்டம்.

 


பிஜேபி ஓட்டை பெற வேண்டும் என்பதற்காக தான் சீமான் பெரியாரை எதிர்த்து பேசினார்


சீமான் பெரியாரை எதிர்த்து பேசியது காரணம் பிஜேபி ஓட்டை பெற வேண்டும் என்பதற்காக, அதனால்தான் இந்த முறை கூடுதலாக வாக்குகளை பெற்றுள்ளார். அனைத்தும் பிஜேபினர் வாக்கு தான் எனவே தான் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என கூறி வருகிறோம். இந்த ஈரோடு தேர்தலில் அது நிரூபணம் ஆகியுள்ளது. பிஜேபி நிற்காமல் நாம் தமிழர் கட்சியை மறைமுகமாக ஆதரவு கொடுத்தது. யார் எந்த கூட்டணி அமைத்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி தான் தமிழகத்தில் தொடர்ந்து வெற்றி பெறும் என்பது இந்த ஈரோடு தேர்தலில் நிரூபணமாகியுள்ளது.

நோட்டாவுக்கு விழுந்த ஓட்டு அனைத்தும் அதிமுகவினர் ஓட்டு


பதிவாண வாக்குகளில் 75% வாக்குகளை திமுக வேட்பாளர் சந்திரகுமார் பெற்றுள்ளார். இந்த 75% என்பது ஈரோடு மட்டுமல்ல தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். நோட்டாவுக்கு விழுந்த ஓட்டு அனைத்தும் அதிமுகவினர் ஓட்டு. பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரைப் பேசியதற்காக நாம் தமிழர் டெபாசிட் இழந்துள்ளது. 

 

ஒன்றிய நிதிநிலை அறிக்கை தமிழகம் குறித்து குறிப்பிடாமல் இருப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்தின் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிஜேபி-யும், பாமகவும் சேர்ந்து போட்டியிட்டன ஆனாலும் கூட மிகப் பெரிய வாக்குகளை பெற முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த நடைபெற்ற பத்து தேர்தலிலும் தொடர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெற்று வருகிறது.

இந்தியா கூட்டணிக்கு இது ஒரு பாடம்


இந்தியா கூட்டணிக்கு இது ஒரு பாடம், எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இனிமேல் இதுபோன்ற பிளவு படாமல் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து வருங்காலத்தில் செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் டெல்லி தேர்தல் முடிவுகள்.