Delhi Election 2025 Results: டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.
டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025:
தற்போதைய சூழலில் தலைநகர் டெல்லி யார் வசம் செல்லப்போகிறது என்பதே, ஒட்டுமொத்த இந்திய மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அங்கு மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான, தேர்தலில் கடந்த 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. அதன் முடிவில், அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து நான்காவது முறையாக டெல்லியில் முதலமைச்சர் ஆவாரா? அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சியை அமைக்குமா? என்ற கேள்வி வானளவு உயர்ந்துள்ளது.
தேர்தல் கருத்துகணிப்புகள்:
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததுமே, பல்வேறு ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தையை கருத்துகணிப்புகளை வெளியிட்டன. அதில் பெரும்பாலானவை பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றே கணித்துள்ளன. குறிப்பாக பாஜக சராசரியாக 40 முதல் 50 இடங்களையும், ஆம் ஆத்மி 20 முதல் 30 இடங்களையும் கைப்பற்றலாம் என தெரிவித்துள்ளன. காங்கிரசிற்கு ஒற்றை இலக்கங்களில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதும், பாஜகவின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.
மோடியின் ஏக்கம் தீருமா?
நாடே கைவசம் இருந்தாலும், தலைநகரம் மட்டுமே எதிரியின் கைப்பிடியில் இருந்தால், ஒரு மன்னர் எப்படி வருந்துவாரோ அதே மனநிலையில் தான், பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளை கடந்து வருகிறார். அடுத்தடுத்து 3 முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானாலும், தலைநகர் டெல்லியில் பாஜகவை ஆளும் கட்சியாக கொண்டு வரும் அவரது முயற்சி, 2015 மற்றும் 2020 பொதுத்தேர்தல்களில் தோல்வியையே சந்தித்தது. இதனால் மத்திய மற்றும் டெல்லி அரசுக்கு இடையேயான, முற்றல் மோதலால் தலைநகர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் என்றே கூற வேண்டும். இந்நிலையில் தான், 11 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, பிரதமர் மோடியின் கனவின்படி தலைநகர் டெல்லியில் பாஜகவின் ஆட்சி அமையும் சூழல் உள்ளதாக கருத்து கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
பாஜகவின் வெற்றிக்கான காரணங்கள்:
- அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு பாஜகவிற்கு பெரும் சாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது
- மத்திய - டெல்லி அரசின் மோதல்களால் வளர்ச்சிப் பணிகள் கடுமையாக பாதிப்படைந்தது மக்களை சலிப்படைய செய்துள்ளது
- காற்று மாசு தொடர்பான விவகாரங்களில் ஆம் ஆத்மி அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக குற்றச்சாட்டு நிலவுகிறது
- எல்ல பிரச்னைகளுக்கும், எல்லா நேரங்களிலும் மத்திய அரசையே குறை சொன்னதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
- எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி தொடர்பான, ஆம் ஆத்மியின் இரட்டை நிலைப்பாடும் கட்சியின் மீதான நம்பிக்கையை அசைத்து பார்த்துள்ளது.