புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் கலகலப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,’சிறையில் எனக்கு நிறைய பூனைங்க நண்பர்களாகிப் போச்சு. தினமும் சப்பாத்தி தருவாங்க. அதைப் பூனைகளுக்கும் கொஞ்சம் போடுவேன். அப்புறம், சிக்கன் க்ரேவி இருக்கும். க்ரேவி நான் எடுத்துக்கிட்டு சிக்கனை பூனைகளுக்குப் போடுவேன். நாம எப்படியும் வெளியே வந்துருவோம்.அவங்க அங்க கிடைக்கறத சாப்பிட்டுக்கிட்டு எலும்பும் தோலுமா இருப்பாங்களே’ எனப் பரிவுடன் பூனைகள் மீதான தனது பிரியத்தைப் பற்றி அந்த பேட்டியில் விளக்கியுள்ளார். மேலும் சிறையில் தனது அன்றாட உடற்பயிற்சி பழக்க வழக்கங்களைத் தான் இடையறாது மேற்கொண்டது குறித்தும் அவர் பேசியுள்ளார். 



பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார் ஜெயக்குமார். அப்போது, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “அதிமுகவை அழிப்பதற்காக தமிழ்நாடு அரசு பொய் வழக்கு போடுகிறது. நகர்ப்புற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற என் மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்" என்று கூறினார்.



முன்னதாக, சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஜெயக்குமார், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் இரண்டு வாரம் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திடுகிறார்.


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரபா, அவரது கணவர் நவீன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக தெரிவிக்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.ஏற்கனவே இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.  


இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி  மார்ச் மாதம் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கறிஞர் மூலமாக செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டதில், ஜெயக்குமார் மீதான ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புகார்தாரர் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜாமினில் வெளியே விட்டால் எங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும், சாட்சிகளை கலைத்து விட வாய்ப்பு என தனது வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். அதனை அடுத்து, காவல் காலம் முடிவடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.