துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, செப்டம்பர் 27, 2021 அன்று அட்வகேட் ஜெனரல் (ஏஜி) ஆர். சண்முகசுந்தரம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.


2021 ஜனவரி 14 அன்று துக்ளக் இதழின் வாசகர்களுடனான வருடாந்திர சந்திப்பின் போது நீதித்துறை பற்றி குருமூர்த்தி கருத்து தெரிவித்ததற்காக மனுதாரர் மீது கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்திருந்தார் முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண். அதற்கு பின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஆர். சண்முகசுந்தரம் மார்ச் 31, 2021 அன்று பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற்றார்.


துக்ளக் பத்திரிகையை நிறுவி, அதன் ஆசிரியராக இருந்த சோ அனைவரும் மதிக்கப்படும் அரசியல் விமர்சகராக இருந்தார். அனைத்துக் கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று துக்ளக் ஆண்டு விழா நடக்கும். அப்போது துக்ளக் வாசகர்களுடன் உரையாடுவதையும், அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதையும் அவர் வாடிக்கையாக வைத்திருந்தார். அப்போது அவர் கூறும் கருத்துகள் நகைச்சுவையுடனும், ஏற்கும்படியாகவும் இருக்கும் என அனைவரும் அவரது பேச்சைக் கூர்ந்து கவனிப்பார்கள். சோவின் மறைவுக்குப் பின் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ஆடிட்டர் குருமூர்த்தி. அவர் சோ பாணியில் 2021 பொங்கல் அன்று அரசியல் பேசினார். சாக்கடையை எடுத்து அவசரத்திற்குத் தீயை அணைக்கப் பயன்படுத்தலாம் என அதிமுக கூட்டணியையும், சசிகலா அதிமுகவில் இணைந்தாலும் பயன்படுத்தலாம் என்கிற ரீதியில் குருமூர்த்தி பேசியதால் சசிகலா தரப்பிலும் கண்டனம் எழுந்தது.



அதே கூட்டத்தில் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்தும் குருமூர்த்தி பேசியது சர்ச்சையை எழுப்பியது. நீதிபதிகள் நியமனம் குறித்தும், நேர்மை குறித்தும், தீர்ப்புகள் குறித்தும் விமர்சிப்பதா என அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி, குருமூர்த்தியின் விமர்சனம் குறித்துத் தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.


அதற்கு அப்போதைய ஏஜி விஜய் நாராயண் ஒப்புதல் அளிக்க மறுத்து ஆட்சி மாறியதும் அதனை திரும்பப்பெற்ற வழக்கில் குருமூர்த்தி ஏஜி நியமனங்கள் மீதே குற்றம் சாட்டி ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த ரிட் மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். துரைசாமியின் விருப்பப்படி, தற்போதைய ஏ-ஜி மறுபரிசீலனை மனு மீதான உத்தரவை பிறப்பித்ததால், மனுதாரர் தனது வழக்கில் வழக்கறிஞரை மட்டும் எதிர்மனுதாரராக இணைத்திருந்தார். அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு அப்போதைய ஏ-ஜியின் ஒப்புதலைக் கோரி கடந்த ஆண்டு ஜனவரியில் வழக்கறிஞர் தாக்கல் செய்த விண்ணப்பம், நாராயண் அத்தகைய ஒப்புதலை வழங்க மறுத்ததன் மூலம் ஒரு தர்க்கரீதியான முடிவை எட்டியதாக அவர் வாதிட்டார்.



இவை இப்படி இருக்க, மே 2021 -இல் ஆட்சிமாற்றத்திற்கு பிறகு ஏ-ஜி அலுவலகத்தில் மாற்றம் ஏற்பட்டபோது, துரைசாமி ஒரு மறுபரிசீலனை மனுவைத் தாக்கல் செய்ததும் அது உடனடியாக அனுமதிக்கவும் பட்டது. இது போன்ற ஒரு நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாதது என்று குருமூர்த்தி கூறினார். நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971 இன் விதிகளுக்கு முரணானது என்றும் கூறினார். பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெறும் நடவடிக்கைக்கு பின்னால் ஒரு "நோக்கம்" இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) கடுமையாக விமர்சிப்பவர் என்பதால் பழிவாங்குகிறார்கள் என்றும் குருமூர்த்தி குற்றம் சாட்டினார். "நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரிய வழக்கறிஞர், இப்போது ஆட்சியில் இருக்கும் திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார், மேலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஏஜி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டவர்,” என்று மனுதாரரின் பிரமாணப் பத்திரத்தை வாசித்து 'அனைத்து நீதித்துறை நடவடிக்கைகளும், சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களால் கையாளப்பட வேண்டும்' என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலியுறுத்தினார்.