தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் திமுக 21 மாநகராட்சியில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இம்மாதம் 2ஆம் தேதி பதவியேற்றனர். இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.


திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு அறிவித்த நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். 30 வார்டுகள் கொண்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் திமுக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.


இதனை அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயந்தி 23 வாக்குகளும்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் 3 வாக்குகளும் பெற்றனர். 3 செல்லாத வாக்குகள் பதிவானது. கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகளை திமுக நெல்லிக்குப்பத்தில் தோற்கடித்தது.


மேயர், தலைவர் உள்ளிட்ட பதவிகளை திமுக ஒரு சில இடங்களில் தன்னுடைய கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் அந்த இடங்களில் திமுக வேட்பாளர்கள் சிலர் தலைமையின் முடிவிற்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த காரணத்தால் கூட்டணி கட்சி தலைவர்கள் திமுக மீது பெரும் வருத்தத்தில் இருந்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.




இந்த நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர்  உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்ற திமுகவினர் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என்றும், பொறுப்பில் இருந்து விலகிவிட்டு தன்னை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.


இந்த நிலையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயந்தியின் கணவர் ராதா கிருஷ்ணன் பதவியில் இருந்து விலகமாட்டோம் என்று கூறியுள்ளார். தாங்கள் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம் என்றும், திமுகவின் ஓட்டுகளால் மட்டும் வெற்றிபெற்றுவிடவில்லை எனவும் தங்கள் நகரத்தின் நன்மையைக் கருதி அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் தங்களுக்கு வாக்களித்ததால்தான் வெற்றிபெற்றோம் என்றும் கூறினார்.


மேலும், தங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டு, பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசிகவை எப்படி வெற்றிபெற வைக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், தங்கள் நிலைப்பாட்டை தலைவருக்கு விளக்கமாக கூறி புரிய வைப்போம் என்றும் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண