2026 சட்டமன்ற தேர்தல்
வருகின்ற 2026 ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் பணிகளை தொடங்கி விட்டன. இந்நிலையில் , அதிமுகவும் தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை விருப்ப மனு நடைபெற்றுகிறது.
எடப்பாடி பழனிசாமி பெயரிலும் மனு தாக்கல்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை முதல் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யும் பலரும் தங்கள் பெயரில் ஒரு விருப்ப மனு தாக்கல் செய்வதுடன், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் ஒரு விருப்ப மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.
திமுக மீதான ஊழல் புகார்
திமுக அரசு மீதான ஊழல் புகார்களால் அக்கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், அதிமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா போல் வேடம்
விருப்ப மனுக்களை தாக்கல் செய்வதன் 5 வது நாளான இன்று அமாவாசை என்பதாலும், அனுமன் ஜெயந்தி என்பதாலும், வெள்ளிக் கிழமை என்பதாலும் விருப்ப மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று மேள தாளத்துடனும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போல வேடமிட்ட கலைஞர்களை அழைத்து வந்தும் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அதிமுக வெற்றி வாய்ப்பு அதிகம்
இதனால் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் திருவிழா போன்று கூட்டம் கூடியுள்ளது. அதே நேரம், அனைவரும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் சார்பிலும் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் விருப்ப மனுக்களை வாங்கி தாக்கல் செய்து வருகிறார்கள். இ.பி.எஸ் நடத்திய எழுச்சிப் பயணத்தின் மூலம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது என்பதையே இந்தக் கூட்டம் காட்டுகிறது.