Kerala John Brittas: திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது வரலாற்று திருப்புமுனை எல்லாம் கிடையாது என ஜான் ப்ரிட்டாஸ் பேசியுள்ளார்.
திருவனந்தபுரத்தை கைப்பற்றிய பாஜக:
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கேரளாவில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பெரும்பான்மையான வார்ட்களை கைப்பற்றி, மேயல் பதவியை பாஜக வசப்படுத்தியது. இதனால் கிட்டத்தட்ட கடந்த நான்கு தசாப்தங்களாக அங்கு நீடித்து வந்த ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இது தேசிய அளவில் கவனம் ஈர்த்ததோடு, பாஜக கேரளாவில் காலூன்றியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். அதுபோக, இது ஒரு பெரிய திருப்புமுனை என பாஜகவின் வெற்றியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி உறுப்பினருமான சசி தரூரும் பாராட்டினார்.
ஜான் ப்ரிட்டாஸ் விமர்சனம்:
இந்நிலையில் திருவனந்தபுரம் வெற்றி தொடர்பான பிரதமர் மோடி மற்றும் சசி தரூரின் கருத்துக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஜான் ப்ரிட்டாஸ் பதிலடி தந்துள்ளார். இதுதொடர்பான பதிவில், “ ஆம், கேரளா உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. ஆனால், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜகவின் வெற்றியை ”திருப்பு முனை” என சசி தரூர் மற்றும் "பாஜகவின் வரலாற்றுச் சிறப்பு வெற்றி" என பிரதமர் மோடி கூறியதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 214 வாக்குகளை வென்ற பாஜக, மாநாகராட்சி தேர்தலில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 891 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அதாவது வாக்குகள் குறைந்துள்ளது. ஆனால் இடதுசாரிகள் வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஆம், உள்ளடக்கம் பொருத்தமானது அல்ல, ஆனால் கதை பொருத்தமானது” என குறிப்பிட்டுள்ளார்.
தரவுகள் சொல்வது என்ன?
ஜான் ப்ரிட்டாஸ் வெளியிட்டுள்ள தரவுகளில், திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கழக்கோட்டம், திருவனந்தபுரம், நேமம், வட்டியோர்கவு மற்றும் கோவளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த நாடாளுமன்ற மற்றும் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்கு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இந்த 5 தொகுதிகளில் 2,13,214 வாக்குகளை பெற்றுள்ளது. அதேநேரம் இடதுசாரிகள் 1,29,048 வாக்குகளும், காங்கிரஸ் கூட்டணி 1,84,727 வாக்குகளையும் பெற்றுள்ளன.
அதேநேரம், மாநகராட்சி தேர்தலில் அந்த தொகுதிகளில் சேர்த்து பாஜக 1,65,891 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் இடதுசாரிகள் நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் கிட்டத்தட்ட 38 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளன.
வெற்றி முக்கியம் பாஸ்
பாஜக வெற்றி பெற்று இருந்தாலும், கூடுதல் வாக்குகளை பெற்றது சிபிஎம் தான் என்ற வாதத்தை தான் ஜன ப்ரிட்டாஸ் முன்வைத்துள்ளார். ஆனால், என்ன தான் அதிகப்படியான வாக்குசதவிகிதத்தை பதிவு செய்து இருந்தாலும், வார்ட்களின் எண்ணிக்கை அடிப்படையில் மேயர் பதவியை கைப்பற்றியது நாங்கள் தான் என பாஜகவினர் பதிலடி தந்து வருகின்றனர்.