PM Modi TN Visit: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாதம் மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக தேர்தல்.. பாஜக திவிரம்..
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததில் இருந்தே, தமிழ்நாடு தேர்தலில் பாஜக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர முனைப்பு காட்டி தீவிர பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. வலுவான திமுக கூட்டணிக்கு நிகராகவும், அதற்கு சவால் கொடுக்கும் விதமாகவும் தங்களது கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் டெல்லி பாஜக தலைமை உறுதியாக உள்ளதாம். இதற்காகவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் தான், பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தமிழகம் வருகை:
இந்நிலையில் வரும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. இந்த பயணத்தின் போது, தமிழக விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் தமிழகத்தில் விவசாயிகளுடன் இணைந்து முதல்முறையாக பிரதமர் மோடி கொண்டாடும் பொங்கல் விழாவாக இது இருக்கும். இதுபோக பொங்கல் விழாவை ஒட்டி நடைபெறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கக் கூடும் என கூறப்படுகிறது. டெல்டா சார்ந்த மற்றும் கொங்கு மாவட்டங்களிலும் பிரதமர் பயணம் மேற்கொள்ளக்க்கூடுமாம். கூடுதலாக கூட்டணி கட்சிகளை மேடையேற்றி பிரதமர் மோடி தலைமையில், பொதுக்கூட்டத்தை நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். பிரதமரின் இந்த பயணம், கிராமப்புற மக்கள் மற்றும் தமிழகத்தின் கலாச்சார ரீதியான ஒருங்கிணைப்பை இலக்காகக் கொண்ட ஒரு முக்கிய மக்கள் சந்திப்பு முயற்சியாக இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக தீவிரம்:
பிரதமர் மோடி வருகையின்போது தேசிய ஜனநாயக கூட்டணி, முழு வடிவம் பெற்றிருக்க வேண்டும் என தமிழக பாஜகவிற்கு தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். பாமக, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் கூட்டணியில் ஒருங்கிணைக்க விரும்புகிறதாம். இதன் காரணமாகவே அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் அடுத்தடுத்து டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனராம். மோடி வருகையின்போது கூட்டணி இறுதி செய்யப்படுவதோடு, தொகுதிப் பங்கீட்டையும் கிட்டத்தட்ட உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். இதனால் பிரதமர் மோடியின் வருகை, தமிழக சட்டமன்ற தேர்தலில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது.