இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு என்று, தனி வரலாறு இருக்கிறது. இன்றைய சூழல் காங்கிரஸ் கட்சியின் முகமாக ராகுல் காந்தி பார்க்கப்படுகிறார். இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் இருந்து வருகிறார். ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலதரப்பட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகிறது. சாதிவாரி கணக்கு எடுப்பின் மூலம், சமூக-பொருளாதார நிலையை அறியும் ஒரு செயல்முறையாகும். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டப்படும் என தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
காங்கிரஸின் நிலைப்பாடு
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்புக்கு காங்கிரஸ் வரவேற்பை கொடுத்திருந்தது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு வருகின்ற 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நடைபெறும் என அறிவிப்பு வெளியாக்கியதற்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கூறுகையில், 2027ல் நடத்தப்பட உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தேவையான நிதி ரூ.10 ஆயிரம் கோடி என அரசு கூறும் நிலையில், தற்போது வெறும் ரூ.574 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளனர். பெண்கள் இடஒதுக்கீடு பிரச்சினையில் செய்தது போலவே, சாதி கணக்கெடுப்பையும் தாமதப்படுத்துகிறது. எந்த அறிவிப்புகளும் முறையாக இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்திய அளவில் ட்ரெண்ட்
இந்தநிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி தேசிய இளைஞர் காங்கிரஸ் உருவாக்கிய, #CasteCensusKaHero என்ற ஹாஷ்டாக் இந்தியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.