விழுப்புரம்: மதவாத அரசியலிலிருந்து திமுக, விசிக போன்ற கட்சிகள் வெளியில் வரவேண்டும் மனிதத்திற்கான அரசியலை செய்யவேண்டும், பாஜக மனிதத்திற்காக அரசியலை செய்வதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் கடந்த 11.06.2025 ஆம் தேதி பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சென்னையிலிருந்து காரில் உளுந்தூர்பேட்டை சென்றபோது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஸ்வத்தாமனின் மகனுக்கு மட்டும் தலையில் லேசானம் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். இந்நிலையில் விபத்தில் பேருந்து இடித்ததில் சந்தேகம் இருப்பதாகவும் திட்டமிட்டு மோதி விபத்துக்குள்ளாக்கி இருக்கலாம் எனற சந்தேகம் உள்ளதாக கூறி விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் அஸ்வத்தாமன் மனு அளித்தார்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த அஸ்வத்தாமன்.,
பக்தியான மாநாடு எப்படி நடக்கும் என்பதை அமைச்சர் சேகர் பாபு வந்து முருகன் மாநாட்டில் பங்கெடுத்து தெரிந்து கொள்ளவேண்டும், இந்து தர்மத்தை விமர்சிக்கும் மாநாட்டிற்கு தான் செல்வேன், உண்மையாக பக்தியோட நடைபெறும் மாநாட்டிற்கு செல்லமாட்டோம் என்கிறார். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறுவது அரசியல் இல்லை முருக பக்தர்கள் எல்லாம் கூடி மாநாடு நடத்தினால் அரசியல் என்று கூறினால் இதைவிட மதவாத அரசியல் வேறு இல்லை. குறிப்பிட்ட மதத்தை குறிப்பிட்ட வழிப்பாட்டை திட்டி தீர்க்கிறார்கள் வாழ்நாள் முழுவதும் இறைவழிபாட்டை கொச்சை படுத்துகிறார்கள்.
இந்து கடவுள் என்றால் அவ்வளவு கொச்சை படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டினார். இந்துக்கள், பக்தர்கள் ஒரு இடத்தில் கூடினால் வயிறு எரிவதாகவும் மதவாத அரசியலிலிருந்து திமுக, விசிக போன்ற கட்சிகள் வெளியில் வரவேண்டும். மனிதத்திற்கான அரசியலை செய்யவேண்டும், பாஜக மனிதத்திற்காக அரசியலை செய்கிறது எப்போது திருந்த போகிறீர்கள் என காட்டமாக அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
மதுரை முருகன் மாநாடு
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ல் நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை முருகன் கோயில்களில் கோபுரங்களுடன் தனித்தனியாக மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி கோயில்களில் அறுபடை வீடுகளின் மூலவர் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல்களை மாதிரி அறுபடை வீடுகளில் அருள்பாலிக்கும் மூலவர் கையில் பிடித்தபடி காட்சியளிக்கிறார்.
திருப்பரங்குன்றம் முருகன் அமர்ந்தபடியும், பழனி முருகன் ராஜாங்க அலங்காரத்திலும் காட்சியளிக்கிறார். மாதிரி கோயில்களில் அறுபடை வீடுகளின் தூண்கள், சிற்பங்கள் அச்சிடப்பட்ட பிளக்ஸ் ஒட்டப்பட்டு கோயில் போல் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. மாதிரி அறுபடை வீடுகளை ஜூன் 22 வரை பொதுமக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலை, மாலையில் இரு மணி நேரம் பூஜை செய்யவும், பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாதிரி அறுபடை வீடுகளுக்கு வரும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இந்து முன்னணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாதிரி அறுபடை வீடுகளில் வழிபட வரும் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ்பாடி வருகின்றனர். முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ல் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் சரியாக 6 மணிக்கு ஒரே நேரத்தில் கந்த சஷ்டி மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.