நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பலத்தை தந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக பலமான எதிர்க்கட்சி இல்லாததால் விவாதங்கள் இன்றி பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி: ஆனால், தற்போது ஆளும் கூட்டணிக்கு இணையாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது. மக்களவையில் பாஜகவுக்கு 240 எம்பிக்களின் ஆதரவு உள்ள நிலையில், இந்தியா கூட்டணிக்கு 234 எம்பிக்களின் ஆதரவு இருக்கிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 99 எம்பிக்கள் உள்ளனர். இதை தவிர 3 சுயேட்சை எம்பிக்களின் ஆதரவு உள்ளது. மக்களவையில் காங்கிரஸ் பலம் கூடியிருந்தாலும் மாநிலங்களவையில் அக்கட்சிக்கு புது சிக்கல் உருவாகியுள்ளது.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களான கே. சி. வேணுகோபால், தீபேந்தர் ஹூடா ஆகியோர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலங்களவையில் காங்கிரஸ் பலம் குறைய உள்ளது. கே. சி. வேணுகோபால், தீபேந்தர் ஹூடாவை தவிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு 26 எம்பிக்கள் உள்ளனர். இதன் காரணமாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் நூலிழையில் தக்க வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் சவால்: மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோர வேண்டுமானால் 25 எம்பிக்களின் ஆதரவு இருக்க வேண்டும். தற்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே உள்ளார். இப்படிப்பட்ட சூழலில், மாநிலங்களவையில் மொத்தமாக 10 இடங்கள் காலியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றதால் அஸ்ஸாம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, திரிபுரா மாநிலங்களில் தலா ஒரு மாநிலங்களவை இடமும் காலியாகியுள்ளது.
காங்கிரஸின் இருவரை தவிர பாஜகவில் இருந்து 7 மாநிலங்களவை எம்பிக்கள் மக்களவைக்கு தேர்வாகியுள்ளனர். அதோடு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
மாநில சட்டப்பேரவைகளில் கூடுதல் பலம் இருப்பதால் தன்னுடைய 7 பதவிகளை தக்க வைத்தது மட்டும் இன்றி கூடுதலாக 3 உறுப்பினர் பதவிகளையும் பாஜக கைப்பற்ற உள்ளது. மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு 90 எம்பிக்கள் உள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 26 எம்பிக்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்பிக்களும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்பிக்களும் உள்ளனர். பாஜக மாநிலங்களவை குழு தலைவராக உள்ள பியூஷ் கோயல், மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதால் புது தலைவரை நியமிக்க வேண்டியுள்ளது.