தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி நிறைவடைந்தது.
இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றிய திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் திரௌபதி முர்மு ஜூன் 24 ஆம் தேதியும் யஷ்வந்த் சின்ஹா, நேற்று முன்தினம் ஜூன் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து இருவரும் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு தமிழ்நாட்டிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு கோரினார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் ஓட்டலில் கூட்டணி கட்சிகளை சந்தித்தார். இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் திரௌபதி முர்முவை தனித்தனியாக சந்தித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது. அப்போது எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தருமாறு கேட்டதாகவும் கூறப்பட்டது. இதனிடையே இந்த தகவல் தவறானது என்றும், தமிழகத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்