புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 8ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்குத் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் பதவி உருவாக்கம், புதிய அமைச்சர்கள் நியமனம், துறை மாற்றம் ஆகியவற்றுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.  


தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழ உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. அந்த செய்தி கடந்த சனிக்கிழமை அன்று உறுதியானது. அதன்படி, செப்டம்பர் 29ஆம் தேதி, எம்எல்ஏவும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சராக இருந்த அவருக்காக, முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வகித்து வந்த ஒரு துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இதுபோக, 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, 3 அமைச்சர்கள் புதியதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்டனர்.


அமைச்சர்கள் நீக்கம்


குறிப்பாக பால்வள அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், சிறுபான்மையின நல அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான், வன அமைச்சராக இருந்த கே.ராமசந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்றாக ஆவடி நாசர், கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டனர்.


எதற்கு அமைச்சரவைக் கூட்டம்?


இந்த நிலையில் துணை முதல்வர் பதவி உருவாக்கம், புதிய அமைச்சர்கள் நியமனம், துறை மாற்றம் ஆகியவற்றுக்குப் பிறகு இந்தக் கூட்டம் முதல் முறையாக நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முக்கிய அரசுத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. அதேபோல, ஒன்றரை ஆண்டுகளில் பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. 


மத்திய அரசிடம் இருந்து மெட்ரோ பணிகள், எஸ்எஸ்ஏ ஆகியவற்றுக்கு நிதி பெறுவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல அமலாக்கத்துறை மூலம் அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழுத்தம் அளிப்பதை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை


இது ஒரு பக்கம் இருக்க தமிழ்நாட்டில்  வடகிழக்குப் பருவ மழை பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக  சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.