100 நாள் வேலை திட்டம், பெண்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. 


டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் வரும் மக்களவை தேர்தல் குறித்தான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், சில திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.


காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி:


மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். 


50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு வரம்பை நீக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் 


விவசாய பணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் 


இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணியில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் 


இளைஞர்களின் தொழில் முனைவோர் திட்டத்துக்கு ரூ. 5,000 கோடி நிதி வழங்கப்படும்


மத்திய அரசு பணிகளில் மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு


100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 400 நிர்ணயம் செய்யப்படும்.






நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலானது வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது, ஜூன் 2 மற்றும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக  இறங்கியுள்ளன. வேட்பாளர்களை அறிவிப்பது, கூட்டணிகளை உறுதி செய்வது, கூட்டணிகளுக்கான இடங்களை பங்கீடு செய்வது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 


இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியானது, வரும் தேர்தலில் எதுபோன்ற அறிவிப்புகளை வாக்குறுதிகளாக கொடுப்பது போன்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் முக்கியமாக 5 அம்ச திட்டங்களுக்கு வாக்குறுதிகளாக அறிவிக்க ஒப்புதல அளிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பான்மையானவை பெண்களை மையப்படுத்தியே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.