மக்களவையில்  தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு, லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசலின் வழக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.


ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை:


குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையின் முடிவில், அவர் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது. அதேநேரம், ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கியதோடு, மேல்முறையீடு செய்ய அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதியின் எம். பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


அடுத்து என்ன?


தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து அதற்கு தடை பெற ராகுல் காந்திக்கு ஒரு மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதற்குள் தண்டனைக்கு தடை பெறாவிட்டால் ராகுல் காந்தி சிறையில் அடைக்கப்படுவார். அதன் பிறகு அவர் 8 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத சூழலுக்கு தள்ளப்படுவார். இந்நிலையில் தான், தகுதிநீக்க விவகாரத்தில் லட்சதீவுகளின் எம்.பி. முகமது ஃபைசலின் வழக்கு ராகுல் காந்திக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.


முகமது ஃபைசல் வழக்கு:


தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் லட்சத்தீவு மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் முகமது ஃபைசல். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் பரப்புரையின் போது இவருக்கும், அந்த தொகுதியின் முன்னாள் எம்.பி.,யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மறைந்த பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சலே என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது முகமது ஃபைசல் உள்ளிட்டோர் முகமது சலேவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து முகமது ஃபைசல் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.


10 ஆண்டுகள் சிறை தண்டனை:


இந்த வழக்கில் முகமது ஃபைசலை குற்றவாளியாக அறிவித்த லட்சத்தீவு நீதிமன்றம்,  அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதையடுத்து, அவர் எம்.பி. பதவியிலிருந்து உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே, முகமது ஃபைசல் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கும் தடை விதித்தது. இதனால், அவரது எம்.பி. பதவி தகுதி நீக்க நடவடிக்கை என்பது செல்லாதது ஆகிவிடும்.


நாடாளுமன்ற செயலகத்திடம் இறுதி அதிகாரம்:


ஆனால், முகமது ஃபைசலின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், அவை நடவடிக்கைகளில் இதுவரை அவரால் பங்கேற்க முடியவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்ற செயலக அதிகாரிகளிடம் கேட்டபோது, முகமது ஃபைசலின் வழக்கு நூதனமானது என்பதால் அவரை மீண்டும் சபைக்குள் எப்படி அனுமதிப்பது என்பது குறித்து சட்ட ஆலோசனைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்டனர். இதே பாணியில் தான் ராகுலுக்கு எதிரான தண்டனையையும் நீதிமன்றம் நிறுத்தி வைத்தாலும், வயநாடு எம்.பி. ஆக அவர் மீண்டும் தொடர்வது என்பது நாடாளுமன்ற மக்களவை செயலகத்தின் கையில் தான் உள்ளது.