பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் வைட்ஃபீல்ட் (காடுகோடி) முதல் கிருஷ்ணராஜபுரா வரையிலான மெட்ரோ ரயில் பாதையை மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கிறார். தொடங்கி வைத்தப்பின் அவரும் அந்த மெட்ரோவில் மக்களோடு மக்களாய் பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   


பெங்களூரு மெட்ரோ 2 ஆம் கட்டத்தின் கீழ் ரீச்-1 விரிவாக்கத் திட்டத்தின் 13.71 கிமீ தூர மெட்ரோ பாதையை வைட்ஃபீல்ட் (காடுகோடி) மெட்ரோ நிலையத்தில் பிரதமர் மோடி  திறந்து வைக்கிறார். சுமார் 4,250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. KR புரம்-ஒயிட்ஃபீல்ட் மெட்ரோ பாதை மூலம் பயண நேரம் 24 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சாலை வழியாக சென்றால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாகும் என கூறப்படுகிறது. 12 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய இந்தப் பாதையானது பட்டந்தூர் அக்ரஹாரா மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள ஐடிபிஎல் வளாகத்திற்கு நேரடி நடைபாதை இணைக்கப்பட்டுள்ளது.


இந்த மெட்ரோ பாதையில் பையப்பனஹள்ளி மற்றும் கேஆர் புரம் இடையேயான முக்கியப் பகுதிகளில் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் தற்போது இவ்வளவு அவசரமாக இந்த மெட்ரோ பாதையை ஏன் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என  காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா விமர்சித்திருந்தார்.


பிரதமர் மோடி இந்த ஆண்டு கர்நாடகாவிற்கு  பயணம் மேற்கொள்வது இது முதல்முறை அல்ல. கர்நாடக சட்டசபைக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்த தேர்தல களத்தை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. புதிய திட்டம், அரசியல் கூட்டம் என கட்சி தலைவர்கள் கர்நாடகாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். சுற்றுப்பயணத்தின் போது கட்சி தரப்பில் மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை பற்றி மக்களிடையே எடுத்துரைத்து மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகின்றனர்.  


இந்த சட்டமன்ற தேர்தலில் மக்களின் ஆதரவை பெற பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 6 முறை கர்நாடகாவிற்கு வருகை தந்துள்ளார். - பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலை என ஏராளாமான திட்டங்கள் தொடங்கி வைத்துள்ளார். மேலும் மாண்டியா, தார்வார் போன்ற  பல இடங்களில் சாலை மார்கமாக பேரணி மேற்கொண்டார். இன்று காலை பெங்களூரு வரும் பிரதமர் மோடி சிக்பள்ளாப்பூருக்கு சென்று மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைக்கிறார். அதற்கு பின் கே.ஆர்.புரம் முதல் வைட்ஃபீல்ட் வரையிலான மெட்ரோ ரயில் பாதையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு சென்று பா.ஜ.காவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

காங்கிரஸ் கட்சி தரப்பிலும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கர்நாடகாவிற்கு இதற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.