காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54ஆவது பிறந்தநாளை அக்கட்சி தொண்டர்கள் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடினர். பிறந்தநாளையொட்டி வெளிப்படைத்தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமையை குறிக்கும் விதமாக வெள்ளை டி சர்ட்டை பரிசாக அளிக்கப்போவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் பிறந்தநாள்:
நடந்து முடிந்த மக்களவை தேர்தல், காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியை தந்துள்ளது. கடந்து 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என தொடர் தோல்வியை சந்தித்து வந்த காங்கிரஸ்-க்கு தேர்தல் முடிவுகள் பெரும் நம்பிக்கையை தந்துள்ளன.
நாடு மு ழுவதும் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்துள்ளது. காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணங்களே காரணம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தன்னுடைய பிறந்தநாளான நேற்று தனக்கு பிடித்த வெள்ளை டி சர்ட்டை மற்றவர்களுக்கு பரிசளிக்க போவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
'வெள்ளை டி-ஷர்ட்' குறித்து மனம் திறந்த ராகுல்காந்தி:
நான் ஏன் எப்போதும் 'வெள்ளை டி-ஷர்ட்' அணிகிறேன் என்று என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை இந்த டி-ஷர்ட் வெளிப்படைத்தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமையைக் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் இந்த விழுமியங்கள் எங்கே, எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என சொல்லுங்கள்.
#WhiteTshirtArmy என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி உங்கள் பதிலை வீடியோவாக பகிருங்கள். அப்படி செய்தால், உங்களுக்கு வெள்ளை டி சர்ட்டை பரிசாக அளிப்பேன்" என பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் வெள்ளை நிற டி சர்ட்டே எப்போதும் அணிவதன் காரணம் என்ன? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "வெளிப்படைத்தன்மையும் எளிமையே காரணம். நான் உண்மையில் ஆடைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. நான் எளிமையாக இருக்கவே விரும்புகிறேன்" என்றார்.
தன்னுடைய பிறந்தநாளையொட்டி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்திற்கு ராகுல் காந்தி நேற்று காலை சென்றார். டெல்லியில் உள்ள 10 ஜன்பத் சாலையிலும் (காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இல்லம்) கட்சியின் தலைமையகத்திலும் ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் போர்டுகளும் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.