வரும் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவிருக்கிறது. தமிழக அரசியல் களமே பெரிதும் உற்று நோக்கிக்கொண்டிருக்கும் இந்த மாநாட்டில் யார் யார் பங்கேற்க போகின்றார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.


திமுக, அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியமா?


குறிப்பாக, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மூத்த, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் சிலரும், திரைத்துறையை சார்ந்த முக்கிய நடிகர்களும் இந்த மாநாட்டின்போது தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமாவார்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது பரபரப்பான ஒரு தகவல் கிடைத்திருக்கிறது


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பா?


எப்படி மக்கள் நீதி மய்யம் கட்சி மதுரையில் தொடங்கும்போது கமல்ஹாசன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்து வந்து மாநாட்டில் பங்கேற்க வைத்தாரோ, அதே பாணியில், விஜய்க்கு நெருக்கமாக உள்ள மாநில முதல்வர்களை அழைத்து வந்து விக்கிரவாண்டி மாநாட்டில் பங்கேற்க வைக்க விஜய் தரப்பு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் இது குறித்து ஏற்கனவே பேசப்பட்டுள்ளது. ஆனால், அங்கு மழை, வெள்ள பாதிப்பு கடுமையாக இருப்பதால், இந்த சூழலில் களப்பணியாற்றுவதை விடுத்து சந்திரபாபு நாயுடு விஜய் மாநாட்டிற்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், விஜயின் அரசியல் பயணத் தொடக்க மாநாடு என்பதால் அவர் நிச்சயம் வருவார் என்று விஜய் தரப்பு நினைக்கிறது


அதே மாதிரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரையும் அழைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது


விஜய்க்கு தோள் கொடுக்க ராகுல் வருகிறாரா?


அதைவிட முக்கியமாக திமுக தோழமை கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் விஜயின் நண்பருமான ராகுல்காந்தியை மாநாட்டிற்கு அழைத்து வர விஜய் விரும்புவதாகவும் இது குறித்து மத்திய காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விஜய் பேசியுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


2009ஆம் ஆண்டில் புதுச்சேரியில் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்றைய காங்கிரஸ் முதல்வர் வைத்திலிங்கம் முன்னிலையில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய். அந்த நிகழ்ச்சிக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் கூடினர். இதனை கண்ட வைத்திலிங்கம் அதிர்ந்துப் போனார். இது குறித்து ராகுல்காந்திக்கு அவர் தகவல் தெரிவிக்க, விஜயை உடனே சந்திக்க வேண்டும் என்று ராகுலும் அழைப்பு விடுத்தார்.


இந்நிலையில், டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்தித்து பேசினார் நடிகர் விஜய். அப்போது, அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அவருக்கு தமிழக காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பொறுப்பு தரப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், கடைசியில் அப்படி ஒன்று நடக்கவில்லை.


விஜயை கட்சி தொடங்கச் சொன்னதே ராகுல்தானா?


விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும்,  ஆனால், ராகுல்காந்திதான் உங்களுக்கென்று தமிழ்நாட்டில் பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அந்த ரசிகர் பட்டாளத்தை வீணாக்கிவிடாமல் தனியாக கட்சி தொடங்கினாலே உங்களுக்கு அரசியலில் பெரிய எதிர்காலம் உள்ளது என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இது பற்றி சமீபத்தில் கூட காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதரணியும் பேசினார்.


ஒரே மேடையில் – ராகுல் – விஜய் – பரபரப்பாகும் அரசியல் களம்


இந்நிலையில், விஜயின் அரசியல் தொடக்க மாநாட்டிற்கு ராகுல் காந்தி வருவார் என்றும் அதற்கான ஏற்பாடுகளை விஜய் முன்னெடுத்து வருகிறார் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது. அப்படி ராகுல் இந்த மாநாட்டிற்கு வந்தால் அது தமிழக அரசியல் களத்தையே புரட்டிப்போடும் அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்